இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் அவர்களை அங்கிருந்து வெளியேற்றிக்கொண்டிருக்கின்றன.. ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அகதியாக அங்கீகரிக்கப்படுவது முயல்கொம்பாகிவிட்டது என்று அறிந்து கொண்டபின்னரும் இலங்கையை விட்டு தப்பிச்செல்லவே தமிழர்கள் முனைகின்றனர்.
அகதிகளைப் பொறுத்தவரைக்கும் இரண்டுவகையான பிரிவினரைக் காணலாம். முதலாவதாக இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைகளின் விளைவுகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் அதன் கோரத்துள் வாழமுடியாமல் நாட்டைவிட்டு அமைதியான வாழ்வைத் தேடியலைபவர்கள்.
இலங்கையில் படித்த மத்தியதரவர்க்கத்தின் கீழ் அணிகளைப் பொறுத்தவரை சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு முகம்கொடுப்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் சுரண்டலால் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிறு தொழில், வர்த்தகம் என்பவற்றிறுடன் போட்டிபோட இயலாமல் நாட்டைவிட்டு வேறு தேசங்களை நோக்கிச் செல்கின்றனர். இந்த முதலவதுவகையைச் சார்ந்தவர்கள். மீன்பிடித் தொழில், வறிய விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறிய வர்த்தகர்கள், படித்த மாணவர்கள் போன்றவர்கள்.. பல்தேசிய வர்த்தச் சூழலுக்குள் தம்மை உள் நுளைத்துக் கொள்வதற்குக்கூட சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தைச் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்த அணிகள் வெளியேறுவதைத் தவிர வேறு வழிமுறைகளை வாழ்க்கைக்காக வரித்துக்கொள்ள நிராகரிக்கின்றனர்..
இவர்கள் முழுவதுமாகப் பொருளாதார அகதிகள் அல்ல. கோப்ரட் வியாபார நிறுவனங்களும் பேரினவாதமும் இணைந்த நச்சுக் கலவையில் விளைவே இவர்களின் வெளியேற்றம்.
இரண்டாவதாக நேரடியாகப் பேரினவாத ஒடுக்குமுறைக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாக விதைக்கப்படுபவர்கள். இவர்களில் முன்னை நாள் போராளிகளும், குடும்பங்களும், அரசியல் தொடர்புடையவர்களும் அடங்குவர்.
இந்த இரண்டுவகையானவர்கள், நிறவெறி முன்னெப்போதும் இல்லாதவாறு உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் மேற்கு நாடுகளை நோக்கிச் செல்பவர்கள் அல்லது அந்த நாடுகளை நோக்கிய பயணத்தின் தடங்கல் ஏற்பட்டு ஆபிரிக்க நாடுகள், சிறிய தீவுகள் போன்றவற்றில் தங்கிவிடுகின்றவர்கள்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் உலகம் முழுவதும் தமிழ் மக்கள் விதைக்கப்பட இவர்களைப் பயன்படுத்தி வியாபாரம் நடத்தும் புதிய கூட்டம் ஒன்றும் எம்மத்தியில் உலாவருகின்றது.
இவர்களில் ஆர்பரிக்கும் அலைகடலின் பயங்கரத்தைக் கடந்து அவுஸ்திரேலிய நாட்டை நோக்கிச் செல்கின்ற அகதிகளின் அவலம் உலகத்தைக் குலுக்கும் இன்றைய செய்திகள்.
அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளை அனுப்பும் கைங்கரியத்தை செய்பவர்களின் வலையமைப்பின் உச்சியில் இலங்கை அரசின் தலைமைப் பதவியிலிருப்பவர்களும் அடங்குவார்கள் என்று பல்வேறு தகவல்கள் ஆதாரம் காட்டுகின்றன. குறிப்பாக நாமல் ராஜபக்ச மனிதக் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாக பரவலான தகவல்கள் வெளியாகின. தலைக்கு ஒரு மில்லியன் இலங்கை ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு இத் தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவின் வலையமைப்பில் உள்ளூர் தமிழ் அரசியல் வாதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் சிலரின் பெயர்களும் வந்துபோயின.
ராஜபக்ச குடும்ப கிரிமினல்களைப் பொறுத்த வரைக்கும் பணத்தை எந்தவழியிலாயினும் திரட்டிக்கொள்வதே அவர்களின் பிரதான நோக்கம். ஆள்கடத்தலுக்குப் பின்னால் வேறு நோக்கங்களையும் காணலாம்.முல்லைத் தீவு மற்றும் மட்டக்களப்புப் பகுதிகள் ஊடாகக் கடத்தப்படும் அகதிகள் தமது சொந்த நிலங்களை விற்பனை செய்து பணத்தைத் திரட்டிக்கொள்கின்றனர். அந்த நிலங்களை அபகரித்து பெரு வியாபாரிகளுக்கும், குடியேற்றவாசிகளுக்கும் விற்பனை செய்வதால் ஆள்கடத்தல் பேர்வளிகள் இலாபத்தை இரட்டிப்பாக்கிக்கொள்கின்றனர். தவிர, நிலங்களை அபகரித்து சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்துவதும் இவர்களின் உப நோக்கங்களில் ஒன்றாகும்.
அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படும் அகதிகளில் எங்குமில்வலாது தொலைந்து போனவர்களின் பட்டியல் எவருக்கும் தெரியாது. அவுஸ்திரேலிய அரசு அகதிகளை அங்கீகரிக்கிறது என்ற விம்பம் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியாத கிராமப் புறத்தினருக்கு இலங்கையரசால் திட்டமிட்டு வழங்கப்படுகின்றது.
அகதிகளின் இடப்பெயர்வுக்கு இலங்கை அரசின் ஒடுக்குமுறையும், பேரினவாதத் தாக்குதல்களும் நேரடிக் காரணம். தவிர ஐரோப்பாவில் சொர்க்கபுரி ஒன்றில் வாழ்வது போன்ற பிரமையை ஏற்படுத்தும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் புனைவுகளும் இதற்கு எண்ணையூற்றி வளர்க்கின்றன.
தமிழர்களின் பிரதான பிரச்சனைகளில் ஒன்றான அகதிகள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவது ஒவ்வொருவரதும் கடமையாகும். இது இரண்டு பிரதான தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும். முதலாவதாக வெளியேறிய அகதிகளைப் பாதுகாப்பது என்பது.
இரண்டாவதாக, அகதிகளாக வெளியேறுபவர்களின் அவலங்களையும் புலம்பெயர் வாழ்வின் அவலங்களையும் இலங்கையிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு மனிதனுக்கும் சுட்டிக்காட்ட வேண்டும்.சுட்டிக்காட்டுவது. இது அவர்கள் மாற்று வழிகளை மட்டுமன்றி வாழ்வதற்கான போராட்டக்தைத் தமது சமூகக்கடமையாக வரித்துக்கொள்ளவும் வழியமைக்கும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை வாழ்வதற்கான போராட்டத்திலிருந்து தொடங்குவது குறித்து இலங்கைலிருக்கும் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் சிந்திக்க வேண்டுமாயின் உண்மைகளை உரக்கச்சொல்ல வேண்டும்.