15.11.2008.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பலம்மிக்க தளமாக விளங்கிய பூநகரியைக் கைப்பற்றிய இராணுவத்தினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
நீண்ட காலமாக தென்பகுதிக்கு தரைவழியான தொடர்பின்றி துண்டிக்கப்பட்டிருந்த யாழ் குடாநாட்டு மக்களுக்குத் தற்பொழுது தரைவழியான பாதையைத் திறக்கும் நிலை தோன்றியிருப்பதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பூநகரியைக் கைப்பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இதேவேளை, பூநகரி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது என்ற செய்தி யாழ் குடாநாட்டு மக்களுக்கு சந்தோசத்தை வழங்கியிருப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக துண்டிக்கப்பட்டிருந்த யாழ் குடாநாட்டுக்கான தரைவழிப் பாதை தற்பொழுது திறக்கப்பட்டிருப்பதாகவும், இந்தச் செய்தி யாழ் மக்களை சந்தோசத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பூநகரி கைப்பற்றப்பட்டமையால் யாழ் குடாநாட்டு மீனவர்கள் பாரிய நம்மை அடைவார்கள் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த விடயம் தொடர்பாக தான் ஜனாதிபதிடன் இன்று காலை கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.
இதுஇவ்விதமிருக்க பூநகரி கைப்பற்றப்படும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.