தமிழ் திரைப்பட இயக்குநரான சீமான் 2009-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசியலுக்கு வந்தார். சீமான் சினிமாவில் இருந்தவரை பெரிதாக சம்பாதிக்கவில்லை. காரணம் அவரது படங்கள் எதுவும் பெரிதாக ஓடியதில்லை. தம்பி என்ற படம் ஓரளவு பேசப்பட்டாலும் அந்த படம் வசூல் ரீதியாக வெற்றிப் படம் அல்ல.
ஆனால், ஈழப் போரின் முடிவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த சீமானின் சொத்து மதிப்பு பல வழிகளில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்த சீமான் அதற்கான பெருந்தொகை ஒன்றை பெற்றுக் கொண்டார் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நாம் தமிழர் கட்சி துவங்கப்பட்ட பின்னர் போதுமான நிதிகள் கிடைக்காத நிலையில் வீரத் தமிழர் முன்னணிஎன்ற அமைப்பை உருவாக்கினார். பாஜக எப்படி ராமனை வைத்து அரசியல் செய்ததோ அதே போன்று முருகனை வைத்து நாம் தமிழர் கட்சி அரசியல் செய்தது. வீரத்தமிழர் முன்னணி புலம் பெயர் ஈழத் தமிழர்களிடையே ஓரளவு செல்வாக்குப் பெற்றது. அந்த அமைப்புக்கு ஏராளமான நிதிகளையும் புலம் பெயர் ஈழ மக்கள் அள்ளிக்கொடுத்தனர். இது போக தேர்தல் செலவுகளுக்காகவும் ஈழ மக்களிடம் வசூலித்து வந்தார் சீமான். இந்த தொகையே பல கோடி ரூபாய் இருக்கும் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் தனி வீடு, சில இடங்களில் சொந்தமாக நிலங்களை வைத்திருக்கும் சீமான் தமக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார். தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
தமக்குக் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.65,500 வருமானம் வந்துள்ளதாகவும் சீமான் அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓராண்டில் ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் வந்துள்ளதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தனக்கு 8.97 லட்சம் கடன் இருப்பதாக காட்டியிருக்கிறார். 2021 தேர்தலில் கடன் ஏதும் இல்லை என்று காட்டியிருக்கிறார். தனக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாகக் கூறும் சீமான் ஐந்தே ஆண்டுகளில் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து ஒன்பது லட்ச ரூபாய் கடனை அடைத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் சீமானின் வருவாய் குழப்பங்கள் தொடர்பாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.