பத்திரிகையொன்றில் (மே, 2009 க்கு முன்னரானது), “ஒரு சந்திரன் மறையும் போது ஆயிரம் நட்சத்திரங்கள் தோன்றும்” என்ற புது மொழியை வாசித்தது நினைவுக்கு வருகிறது. “சந்திரன், “நட்சத்திரங்கள்” என்பன யாரைக் குறிப்பன என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். “சந்திரன்” மறைந்த பின் தோன்றிய “நட்சத்திரங்களின்” காலம், தமிழர்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தினைப் புரிந்துள்ளது என்பதனை மே, 2009 இன் பின்னரான மூன்றாண்டுகளின் அனுபவத்தின் வழியாக நோக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இந்த மூன்றாண்டு இடைக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் அனுபவமானது, மே, 2009 இல் இடம் பெற்ற அழிவானது, வட, கிழக்குத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போரட்டத்தில் மட்டுமன்றி, அவர்கள் சமூக-பொருளாதார-கலாசார நிலைமைகளில் மட்டுமன்றி, ஒரு இனமாக வாழும் நிலையிலும் பல்வேறு வகைகளில், பாரிய மாற்றங்களை விளைவித்த நிகழ்வு ஒன்றாகவே கருதப்பட வேண்டும் என்பதை தெளிவுற உணர்த்தியிருக்கிறது. மூன்றாண்டு இடைக்காலமானது முன்னய காலத்திலிருந்து எந்த வகையிலும் உன்னதமானதாகத் தெரியிவில்லை !
மே, 2009 இல் இடம் பெற்ற அழிவானது, ஒன்று புலிகளின் அழிவாகவும் மற்றது மக்களின் அழிவாகவும் இடம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, வட, கிழக்கு சிங்கள் பௌத்த ஆட்சிக்குள்ளும் இராணுவ முற்றுகைக்குள்ளும் சிக்குண்டுவிடுகிறது. பௌத்த – சிங்கள மயமாக்கல் பல்முனைகளிலும் திட்டமிட்ட வகையில் நடைபெறுகிறது என்பது நாளாந்தச் செய்தியாகிவிட்டது. இது குறித்த விரிவான அநிக்கைகள் பல வெளிவந்துள்ளன. மேலாக, மக்களின் சமூக-பொருளாதார-கலாசார வளர்ச்சிக்கான சுயாதீனமான முயற்சிகளும் கட்டுப்படுத்தப்பட்டே வருகிறது.
மற்றொரு புறம் துணைப்படைகளினதும், இனந்தெரியாத நபர்களினதும் நடவடிக்ககைள் வட, கிழக்கின் கிராமங்கள் வரை விரிவு படுத்தப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவினது குழுவினரின் செயற்பாடுகள் தொடர்ந்து வந்த அதேவேளை, பிள்ளையான் மற்றும் கருணாவின் குழுக்களின் செயற்பாடுகளும் இடம் பெறுகின்றன.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு ஆதரவற்ற கட்சிகள் போட்டியிட முடியாமலிருந்தது. 2012 மேயிலும், முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு மதச்சடங்ககுளையும், நினைவஞ்சலிகளையும் செய்ய முடியாமலிருக்கிறது. இடையில் பல்வேறு சம்பவங்கள் நடந்துமுள்ளன.
புலிகளின் அழிவின் பின்னர், இந்திய – மேற்குலக வெளியுறவுக் கொள்கைகள் தமிழர்களுக்கு சாதகமாகத் திரும்பத் தொடங்கியது எனப்பேசப்படுகிற போதிலம், அந்த ஆதரவுத் தளம் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மறைமுக நெருக்கடியையும் தோற்றுவித்துவிடுகிறது.
இந்தப்பின்புலத்தில் இருந்துதான் மே, 2009 இன் பின்பான நிலைமைகளை நோக்க்னை ஒரு தேசிய விடுதலைக்கான கட்சியாக முன்னெழுந்தமை குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வட, கிழக்கு கிராமிய மட்டத்திலான ஒரு பரந்த ஆதரவுத் தளமும் – செயற்பாட்டுத் தளமும் இருக்கிறது. மற்றொரு புறம் தேசிய விடுதலையின் தொடர்ச்சியைப் பேணுதல் என்ற நிலையில் மக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களித்தமையும் இடம் பெற்றது. அகதிகளாக்கப்பட்ட வன்னி மக்களும் – பிரதேச வாதத்தினைப் பேசிய மட்டக்களப்பு மக்களும் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நிற்கிறார்கள் என்பது ஒரு முக்கிய செய்தி. தற்போiது, அரசாங்கமும் – அதன் ஆதரவுக் குழுக்களும் இந்த இரண்டு நிலைமைகளையும் புரிந்து இருக்கிறார்கள். மாக்சியர்கள், இன முரண்பாடே – தேசிய முரண்பாடே பிரதான முரண்பாடு என முடிவெடுக்க வேண்டியாகிறது.
ஆனால், த.தே.கூட்டமைப்பின் தலைமையிலான இக்காலத்தின் இறுதியில், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது என்ற கருத்து முன்வைக்கப்;படுகிறது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் வட,கிழக்கில் வாழும் (சிலகாலங்களில் இவ்வெல்லைக்கப்பால் வளர்ச்சியுற்றிருமிருந்தது) பரந்து பட்ட தமிழ் மக்களின் 60 ஆண்டுகால அரசியல் போக்காகவும் , பேரினவாத ஒடுக்கு முறை மற்றும் சமூக ஒடுக்கு முறைக்கருவியான ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்;கெதிரான பாராளுமன்ற வழியிலான, இராணுவ வழியிலான போராட்டமாக அதாவது ஒடுக்கு முறை அரசுக்கெதிரான எதிர்ப்பியக்கமாக விளங்கியது. அப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது என்ற கருத்து முன்வைக்கப்;படுகிறது.
மே, 2009 இன் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக வந்த தமிழத் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளால் ( ஆயிரம் நட்சத்திரங்களில் சில!) அந்த எதிர்ப்பியக்கத்தினை “சனநாயக வழியிலோ அல்லது சீரான முறையிலோ” இதுவரை கட்டியமைக்க முடியவில்லை. இத்தலைவர்கள் பலமுறையும் “மக்கள் போராட்டம்” பற்றிப் பேசிய போதும் கடந்த மூன்று வருட காலத்தில் மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமற்ற பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டமை, தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் போராடாமை, ஜெனிவாவில் கலந்து கொள்ளாமை, 13வது திருத்தத்தினை ஏற்றுக்கொள்ள முனைகின்றமை, ஐ.தே.கட்சியடனான இணiவு, சிங்கக்கொடிய ஏந்தியமை போன்றவை இந்தக் கருத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தெரிவுக்குழுவில் இணைந்து செயற்படுவது எறுதியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
த.தே.கூட்டமைப்பு, 2009 மே இன் பின்னர், தமிழத் தேசியம் பேசி முன்னெழுந்த போதும், அக்கொள்கையில் தீவிர பிடிவாத முடையவர்களையும்
இந்திய எதிர்ப்பணர்வு உடையவர்களையும் ஒதுக்கிக் கொண்டது. பின்னர், இக்கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி – அதன் தலைவர் இரா. சம்பந்தனும் அவரின் கையாளுமான சுமந்திரனும் வலுவுடையதொரு செல்வாக்கினைப் பெற்றுக்கொண்டு, கூட்டமைப்பின் செயற்பாடுகளைத் தீர்மானித்து வருவதாகவே கூறப்படுகிறது.
மற்றொரு புறம் அரசியல் எழுத்தாளர்கள் “எதிர்ப்பியக்கத்திற்கு” எதிரான ஒரு கருத்தியலை உருவாக்கியும் வருகிறார்கள். அதன் வகைமாதிரிகளில் முக்கியமானவர் யதீந்திரா. யதீந்திரா, பத்திரிகையில் (தினக்குரல் – புதிய பண்பாடு, சனி 12 மே 2012) , “எனது நண்பர் ஒருவர் எதிர்ப்பரசியல் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டிருந்தார். குறித்து வைத்துக் கொள்ளுங்கள் – எல்லாவற்றையும் புறக்கணிக்கும் இந்த வகை எதிர்ப்பரசியலை தொடருவீர்களானால், ஒரு காலத்தில் வன்னி, வாகரை போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் உல்லாசப் பிரயாணிகள் வேடிக்கை பார்க்கும் மக்களாக மாறுவர். சில நாடுகளில் அப்படி வேடிக்கை பார்க்கப்படும் மக்கள் இருக்கின்றனர். அத்தகையதொரு நிலைமை எங்களது மக்களுக்கும் நேரும்.” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் நண்பர் குறிப்பிடுவதனைப் போல, எதிர்ப்பரசியல் என்பது “எல்லாவற்றையும் புறக்கணிக்கும் போக்கு” இல்லை. ஆனால் யதீந்திராவும் அவரது நண்பரும் கருதுவது, ஸ்ரீலங்கா அரசுக்கெதிரான எல்லாவகையான எதிர்ப்புப் போராட்டங்களையுமாகும். அத்தகைய எதிர்ப்புப் போராட்டங்களை த.தே.கூட்டமைப்பு மேற்கொள்ளத் தலைப்படக்கூடாது என்பதே அவர்கள் எதிர்பார்ப்பாகும். மாறாக “இணக்க அரசியலை” வரவேற்கிறார்கள்.
கூட்டமைப்பின் தலைவர் , “இரா.சம்பந்தன் முதிர்ச்சியான தலைவர். ஆனால், அவர் ஒரு பிரிவினைவாதியல்ல.” எனக்குறிப்பிடுவதுடன், “இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் சிங்கக் கொடியை உயரத்தி ஐக்கிய இலங்கையின் மீதான பற்றுதியை காண்பித்திருக்கின்றார்.” எனவும் குறிப்பிட்டு, சம்பந்தன் இவ்வாறு எதிர்ப்பரசியலை கைவிட்டுச் சென்றமைக்கான பல தக்க சான்றகளையும் குறிப்பிடுகிறார்.
அவ்விடயம் குறித்து, த.தே.கூட்டமைப்பிற்குள் முன்னெழுந்துள்ள விமர்சனங்களையும் அவர் வெறுக்கிறார். “சம்பந்தனின் செயற்பாடு குறித்து கூட்டமைப்பிற்குள்ளும் சில தமிழ்த் தேசியவாத தரப்பினர் மத்தியிலும் சலசலப்புக்கள் காணப்பட்டாலும் மேற்படி நகர்வு இராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.”, எனவும் “அது குறித்து சரியான புரிதல் கூட்டமைப்பிற்குள் இல்லை என்பதே பிரச்சினையாகும்.” எனவும் குறிப்பிடுகிறார்.
யதீந்திரா “ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்லுதல் எனும் பீடையினால்” பாதிக்கப்பட்டுள்ளார் போலும். அவர் முன்னர் தமிழ் தேசியம் குறித்துப் பேசியதற்கு முற்றிலும் எதிரான ஒரு போக்கு இது.
அதே வேளை இந்த அபிலாசைகளுக்குப் பின்னால் வேறு ஒரு அரசியல் பின்புலம் இருக்கிறது என்பதனையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையில் இந்த முடிவிற்கு அவரையும் அவர்கள் போன்றவர்களையும் இட்டுச் சென்றது எது? அதற்கான காரணத்தினை அவரே வேறோர் இடத்தில்,
“இன்று குறிப்பான சர்வதேச அரசியல் சூழலால் சில வாய்ப்புகள் கனிந்திருக்கின்றன. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பில் கூட்டமைப்பு இருக்கிறது. இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் முதலில் த.தே.கூட்டமைப்பு ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.” எனவும் “அமெரிக்கா புலிகள் வீழ்ந்த மே 18 இனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதற்கான திகதியாகத் திட்டமிட்டிருக்கிறது. இதன் போது சில முக்கிய முடிவுகளைக் கொழும்பு அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகையதொரு சூழலில் சம்பந்தன் ஐக்கிய இலங்கையின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தியிப்பது ( சிங்கக் கொடியை ஏந்தியது உட்பட்டவை) அரசியல் ரீதியில் முக்கியத்துவம் உடையது” எனவும் குறிப்பிடுகிறார்.
இந்த சர்வதேசக் காரணத்தினால்தான், அவர் எதிர்ப்பரசியலை அபாயமானது எனக் கூறி அதனை நிராகரிக்கிறார். “மேற்படி நகர்வு இராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.” எனவும்; “தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கும் ஆதரவு சக்திகளின் அதிருப்திகளை சம்பாதிக்க நேரிடும்.” எனவும்; அவர் குறிப்பிடுகிறார். “இன்றைய சூழலில் கனிந்திருக்கும் வாய்ப்புக்களை த.தே.கூட்டமைப்பு சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறின் தமிழச் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினர் பழங்குடியினர் நிலைக்குத் தள்ளப்படுவது உறுதி” எனவும் அவர் தனது அறிவுரையையும் கூறியிருக்கிறார்.
அண்மைக்காலமாக விமர்சனத்திற்குப் பதிலாக பல அறிவுரைகளை யதீந்திரா கூறிவருகிறார். இதனை சிறந்ததொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு இன்றைய ஆட்சியாளர்களுக்குரியது.” எனவும் ஆட்சியாளர்களுக்கும் அறிவுரை கூறுகிறார்.
எதிர்ப்பரசியல் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான ஆகக்குறைந்தளவான தீர்வுகளையாவது தருவதற்கு பேரினவாத ஒடுக்கு முறை மற்றும் சமூக ஒடுக்கு முறைக்கருவியான ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் என்ன மாற்றங்கள் நிகழந்துள்ளன? அல்லது தென்னிலங்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் கேள்விக்கான பதிலை எவரும் முன்வைப்பதிலை. வட, கிழக்குத் தமிழர்களின் எதிர்ப்பரசியலிற்குப் பதிலாக, புலம் பெயர் தமிழச் சமூகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அமரிக்கா- இந்திய அழுத்தங்கள் ஒரு தீர்வினைப் பெற்றுத் தரும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
இத்தகைய சரணாகதி அரசியல் குறித்து பலமான எதரிப்புக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர தேசியவாதிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள். தினக்குரல் பத்திரிகையில் (புதிய பண்பாடு, சனி 12 மே 2012) முத்துக்குமார், தனித்துவ அரசியலைக் கைவிட்டு தென்னிலங்கை கட்சிகளோடு இணைந்த அரசயிலைத்தானே டக்ளஸ் தேவானந்தாவும், பிள்ளையானும், கருணாவும், விஜயகலாவும் செய்கின்றனர். அந்த அரசியலைத்தான் கூட்டமைப்பும் செய்வதென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தனியான கட்சி ஏன்? என முன்வைத்துள்ள கேள்வி நியாயமானதே. இணக்க இரசியல் என்ற வகையில், இவர்களோடு ஒப்பிடுகையில், சில வழிகளில் டக்ளஸ் தேவானந்தாவும், பிள்ளையானும் சிறப்பானவர்கள் என சிலாகிக்கப்படுகிறார்கள்.
சம்பந்தன் தேசியக் கொடியினை ஏந்திய விவகாரம் குறித்து முத்துக்குமார், “இதற்கான அழுத்தம் இந்தியாவினாலும், அமெரிக்காவினாலும் சம்பந்தனுக்குக் கொடுக்கப்பட்டது. சம்பந்தன் தமிழ்த் தேசியத்தை விலையாகக் கொடுத்து அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தியிருக்கிறார்.” என நிலைமைகள் குறித்து விளக்குகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற “முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ம் ஆண்டு நினைவு தினத்தில்” பேசிய வன்னி மாவட்ட பா.உ. வினோ நோகராதலிங்கம், “ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அதில் கூட்டமைப்பு தேவையில்லையென அமெரிக்கா கூறியது. ஒன்றிணைந்த மேதினத்தில் பங்குபற்றுமாறு கூறிய அமெரிக்காவும் இந்தியாவும் தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்புபற்றுமாறு கூறுகின்றது.” எனக்குறிப்பிட்டிருக்கிறார். த.தே.கூட்டமைப்பின் போக்கிற்கான காரணங்கள் தெளிவானவை.
த.தே.கூட்டமைப்பின் இந்த இணக்க அரசியல் குறித்து முத்தக்குமார், இலங்கை விவகாரத்தில் அமெரிக்க-இந்திய கூட்டு அணுகுமுறை மூன்று கட்டங்களாக நகர்த்த திட்டமிட்டிருந்தது. முதலாவது மகிந்தர் அரசினை பணிய வைப்பது. அது சரிவராத போது இரண்டாவது கட்டத்தில் ஆட்சி மாற்றத்திற்கு முயல்வது. அதுவும் சரிவராது போது மூன்றாவது தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரப்பது. இது விடயத்தில் பிரிவினை மட்டம் பற்றிக் கூட சிந்திக்க முனையலாம் என ஆய்வாளர்களினால் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. எனவும், அமெரிக்கா தன்னுடைய நலன்களை அடைவதற்கு தமிழர் விவகாரத்தை தான் கருவியாகப் பயன்படுத்துகின்றது. இந்த நிலையில் தமிழ்த் தரப்பு தன்னுடைய நிலைப்பாட்டினை உறுதியாக முன்வைத்திருக்க வேண்டும். எனக்குறிப்பிடுகிறார்.
தன்னுடைய நலன்களுக்கு தமிழ் அரசியல் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதற்காகவே அமெரிக்காவும், இந்தியாவும் தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றைக் கைவிடும் படியும், தேசியக் கொடியை ஏற்றும் படியும் கூட்டமைப்பினை நிர்ப்பந்தித்தன. கூட்டமைப்பும் அதற்கு இணங்கிப் போனது. எனவும் குறிப்பிடுகிறார்.
த.தே.கூட்டமைப்பின் இந்த அரசியல் போக்கு, தமிழர்களின் தேசிய விடுதலைக்கு ஆபத்தானது என்பது முத்தக்குமார் கருத்தாகும். அவர், “தற்போது மகிந்தர் பணிந்து போவது போவதற்கு தயாரிகிவிட்டதாகவே தகவல். இங்குதான் தமிழ்த் தரப்பிற்கு மிகப் பெரும் ஆபத்துக் காத்துக்கிடக்கின்றது. மகிந்தர் பணிந்து போனால் தமிழ் மக்களுக்கு கிடைப்பது வெறும் வடமாகாண சபைத் தேர்தல் மட்டும்தான். நீண்டகால அரசியல் அனுபவமுடைய வடபகுதிக் கவிஞர் ஒருவர் கூறினார், “இலங்கை சீனாவைக் கைவிட்டால் உலகம் தமிழ் மக்களைக் கைவிடும்”. எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலைமையானது அதாவது எதிர்ப்பரசியலை ஆபத்தானது எனக் கருதி அதனை எதிரக்கும் போக்கானது, மக்கள் மத்தியலான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மக்களை அணிதிரட்டிப் போராடச் செய்வதிலும் பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் , தற்போது இருக்கின்ற அரசியலமைப்பிற்குள் ஏதாவது மாற்றங்களைப் பெற்றுக் கொள்ள முனையும் ஒரு போக்கு வளரத் தொடங்கியுள்ளது. இது சமூக விடுதலைக்கான போராட்டத்தினையும் பின்தள்ளச் செய்துவிடும். தற்போதைக்கு புரட்சிகர அரசியலைப் பேசுதல் என்பது, சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் மட்டுமன்றி, தமிழ் அரசியல் தலைமைகளாலும் – தமிழ் உயர்குழாத்தினராலும் வெறுக்கப்படுவதாக மாறிவிட்டது.
காலகண்டன் (தினக்குரல் பத்திரிகையில் (புதிய பண்பாடு, சனி 12 மே 2012), கட்டுறுதியான அரசியல் சமுதாயத்தின் தேவை குறித்து எழுதி, (இதை வலியுறுத்தி எழுதியவர் தினக்குரல் அசிரியராவார்), “இன்றைய இலங்கைத் தமிழ்ச் சூழலில் மேற்படி கூற்று மிகமுக்கியமான ஒன்றாகும். ஆனால் இது எவ்வகையிலும் விவாதிக்கப்படவே இல்லை. அதனை ஒரு ஆரோக்கியமான அரசியல் விவாதப் பொருளாக்கி பரந்துபட்ட ஜனநாயகக் கலந்துரையாடலின் ஊடாக மக்கள் மத்திக்கு எடுத்துச் செல்லும் போக்கு காணப்படவில்லை. அதற்கான மனப்பாங்கு அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் உள்ளிட்ட சிவில் சமூகத்தினர் எனப்படுவோரிடம் எழவே இல்லை.” எனும் கருத்தானது கவனத்திற்குரியது.
அமெரிக்கா தன்னுடைய நலன்களை அடைவதற்கு தமிழர் விவகாரத்தை தான் கருவியாகப் பயன்படுத்துகின்றது. இந்த நிலையில் தமிழ்த் தரப்பு தன்னுடைய நிலைப்பாட்டினை உறுதியாக முன்வைத்திருக்க வேண்டும் எனவும், தமிழ் மக்களின் பெரும்பாண்மை ஆதரவினைப் பெற்ற அமைப்பு என்ற வகையில் சர்வதேச விழுமியங்களின்படி அமெரிக்க, இந்திய அழுத்தங்களை நிராகரிக்கும் இயலுமை கூட்டமைப்பிடம் இருந்தது. ஆனால் கூட்டமைப்பு அதற்கு தயாராக இல்லை. என்பதுவம் புலிகளுக்குப் பின்னர் இன விவகாரத்தின் சர்வதேசப் பரிமணாத்தை முதலீடாகக் கொண்டு கூட்டமைப்பு அரசியல் ரீதியாக முன்னேறியிருக்க முடியும் என்பதுவும் முத்துக்குமாரின் வாதமாகும்.
இன்று அவசியமானது மாற்று அரசியல் இயக்கமே. அது மரபு ரீதியான கட்சி அரசியலிலிருந்து விலகி தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் கையாளக்கூடிய தேசிய இயக்கமாக மிளிர வேண்டும். கூட்டமைப்பினால் ஏற்பட்ட அரசியல் தோல்வியை முழுச் சமூகம் மத்தியிலும் பரவவிடாமல் தடுப்பதற்கு எஞ்சியுள்ள ஒரே வழி மாற்று அரசியல் இயக்கத்தை கட்டி வளர்ப்பதே என்பது முத்துக்குமாரின் முடிவாகும். மாற்று அரசியல் இயக்கம் குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது.
த.தே.கூட்டமைப்புக் குறித்து ஒரு பரந்த விமர்சனம் கட்சியினுள்ளிருந்தும், வெளியிலிருந்தும் முன்னெழுந்துள்ளது. இந்த விமர்சனங்கள் பலர் பயப்படுவது போல், தமிழரின் “நலிந்த அரசியலை” மேலும் நலிவுறச் செய்யுமா, அல்லது ஆரோக்கியமான பாய்ச்சலுக்கு வழிவகுக்குமா? என்பது வரலாறு விட தரவேண்டிய வினா.
த.தே.கூட்டமைப்பின் தலைமையின் அரசியல் போக்கிற்கு எதிரான விமர்சனங்கள் தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி என்ற கொள்கையில் இறுகிப் போயிருப்பதனையும் காணமுடிகிறது.
புறக்கணிப்பு வேறு. எதிர்ப்பரசியல் வேறு. தருவதை வேண்டாம் என்று சொல்வது புறக்கணிப்பு. வேண்டாததை திணிக்கும் போது நிராகரிப்பது எதிர்ப்பரசியல்.
எதைக் கொடுத்தாலும் வாங்குங்கள் இல்லையேல் வாகரை வேடராக மாறுவீர்கள் என்று சொல்வது பேரினவாதத்தின் குரல் போல் இருக்கிறது. 2009 இற்கு முன், ‘தாரகா ‘ என்ற புனைவுப் பெயரில் ,ஆயுதப்போராத்தை ஆதரித்து எழுதியவர்தான் இந்த யதீந்திரா.
பலமாக எது இருக்குதோ அதை ஆதரிக்கும் நல்ல குணம் சிலரிடம் உண்டு. ஏனெனில் இவர்கள் தோற்கமாட்டார்கள். ஒருவன் வெல்லும்போது மற்றவன தோற்பான். அது நியதி. நாளை இந்தியாவை மேவி அமேரிக்கா முன்னிலை பெறும்போது, இவர்கள் அமெரிக்கப் பக்கம் இருப்பார்கள்.
2009 முன் யதீந்திரா எழுதிய கட்டுரையை யாராவது இணைப்பீர்களா? கோடி புண்ணியம்.
தயவுசெய்து மக்களை .சம்பந்தே தமிழ்த் தேசியத்துடன் ஒப்பிட வேண்டாம்.சம்பந்தே.உண்மையான தமிழர் விவகாரத்தை தான் கருவியாகப் பயன்படுத்துகின்றர் த.தே.கூட்டமைப்பின் இந்த அரசியல் போக்கு, தமிழர்களின் தேசிய விடுதலைக்கு ஆபத்தானது