இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்றான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இது ஆப்கானைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் கடும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பின் பின்னர் நேட்டோ படைகள் ஆப்கான் மீது போர் அறிவித்தது. என்றாலும் இந்த போரை அமெரிக்காவே முன்னின்று நடத்தியது.
20 ஆண்டுகாலப் போரில் அமெரிக்கா தோல்வியடைந்த காரணத்தால் அமெரிக்கா ஆப்கானை விட்டு வெளியேறியது.தலிபான்கள் பத்தே நாட்களில் மீண்டும் ஆப்கானைக் கைப்பற்றினார்கள். பல நாடுகளும் ஆப்கானுக்குள் சிக்கி கொண்ட குடிமக்களை மீட்டு வரும் நிலையில், இந்தியாவில் இராணுவ விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது. ஆனால், ஆப்கானில் அமைய இருக்கும் தலிபான்களின் அரசு தொடர்பாக என்ன கொள்கை முடிவு எடுப்பது என்பதில் இந்தியாவுக்கு சிக்கல் இருக்கிறது.
காரணம், அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பலான ஐய்ரோப்பிய நாடுகள் தலிபான் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அறிவித்து விட்டன. ஆனால், ஆசியச் சூழல் அப்படி இல்லை. உலக வல்லரசாக உள்ள சீனா ஒரு ஆசிய நாடு. சீனா தலிபான்கள் அரசுடன் மென்போக்கையே கடைபிடிக்கிறது.அதே போன்று ரஷ்யவும் தலிபான்களை ஆதரிக்கிறது. ஆப்கானும் தலிபான்களும் உலக அரசியலின் ஒரு முக்கிய கண்ணியாக மாறியிருக்கும் நிலையில், சீனாவைச் சார்ந்திருக்கும் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளும் ஆப்கானுடன் மென்போக்கை கடைபிடிக்க முடிவு செய்துள்ளன.
ஆனால், அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா ஆப்கானை ஆதரிக்குமா எதிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவுடம் மோதல் போக்கை விரும்பாத இந்தியா லடாக் பகுதியில் தன் ராணுவ நடைமுறைகளை மாற்றிக் கொண்டது. ஆனால், ஆப்கான் விவகாரத்தில் தலிபான்களே இந்தியாவுடன் ஏற்றுமதி இறக்குமதி செய்ய மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் முடிவு மிக முக்கியமானது.
தலிபான்களை எதிர்த்தால் ஆசியாவில் மேலும் தனிமைப்படும் சூழல், ஆதரித்தால் அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளை இழக்கும் சூழலில் இது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வருகிற 26-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில் ஆப்கான் விவகாரம் ஆசியாவில் உருவாகியுள்ள சூழல் தொடர்பாக விரிவாக விவாதிக்க இருக்கிறது.