06.03.2009
கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்புக் காவல்துறையினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுக் கல்கிசை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய வான் தாக்குதல் தொடர்பான கட்டுரையும் அது தொடர்பான படங்களும் பிரசுரிக்கப்பட்டிருந்த ‘ஆனந்த விகடன்’ வார இதழை விற்பனை செய்தமை தொடர்பாகவே ஸ்ரீதரசிங் கைது செய்யப்பட்டதாகத் தமக்கு அறிவிக்கப்பட்டதாக உறவினர்கள் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.
‘ஆனந்த விகடன்’ வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான பொதியை இரத்மலானை விமான நிலையத்திற்கு அனுப்பியபோது, அதனைச் சோதனையிட்ட பொலிஸார் குறித்த விடயங்கள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் படங்கள் இருப்பதை கண்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அதனை அடுத்து, நேற்று வியாழக்கிழமை மாலை இறக்குமதியாளரான ஸ்ரீதரசிங்கின் வெள்ளவத்தை வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் அவரைக் கைது செய்து கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக உறவினர்கள் பிரதி அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரிடம முறையிட்டுள்ளனர். ‘ஆனந்த விகடன்’ வார இதழை ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.