ஆனந்த குமாரசுவாமி வீதியின் பெயரை “நெளும் பொகுன” வீதி என்று பெயர் மாற்றியமை தமிழர்களுக்கு செய்த அகௌரவமான செயலாகும். தமிழர்களின் மரபுரிமைகள் புறக்கணிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளது என்று மேல் மாகாண சபை உறுப்பினரான முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நாட்டிற்கு பெரும் சேவைகள் செய்த தலைவர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களின் பெயர்களை வீதிகளுக்கு சூட்டினார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை படு மோசமான முறையில் சிதைத்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக ஐ.தே.க. வின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டிற்கு சேவையாற்றிய தலைவர்களை கலைஞர்களை கௌரவிக்கும் கலாசாரம் ஆரம்ப காலம் தொட்டே காணப்படுகின்றது.
உதாரணமாக கன்னங்கர வீதி, டி.பி. ஜயா வீதி, மஹிந்த தேரர் வீதி என்று பலரினதும் பெயர்களை வைத்து வீதிகள் காணப்படுகின்றன. இவை எதுவும் பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல.
அப்போதைய அரசாங்கங்கள் அவர்களை கௌரவிக்கும் முகமாக வீதிகளுக்கு அவர்களின் பெயர்களை வைத்தன.
ஆனந்த குமாரசுவாமி வீதியை நெளும் பொகுன மாவத்த என்று மாற்றியமை அநாகரிகமான செயலாகவே கருதப்பட வேண்டும்.
கலைக்காக தொண்டு செய்து நாட்டிற்கு நற்பெயரைப் பெற்றுக் கொடுத்த ஆனந்த குமாரசுவாமிக்கு அரசு துரோகம் இழைத்து விட்டது என்றார்.







