ஆனந்தகுளம் கிராமம் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் : கொழும்பு ஊடகம்

கிளிநொச்சி, நாச்சிக்குடா கடற்புலி முகாமின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பதுங்குகுழிகளை 58வது படைப்பிரிவினர் நேற்று முழுமையாக அழித்துள்ளதாகவும் 57 வது படைப்பிரிவின் முல்லைத்தீவு ஆனந்தகுளம் கிராமத்தை முழுமையாக தமது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, நாச்சிக்குடாப் பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் பதுங்குகுழிகள் மீது படையினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சுமார் 8 மணிநேரம் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தாக்குதல் சமயத்தில் விமானப்படையின் ஜெட் விமானங்கள் விடுதலைப்புலிகளின் நாச்சிக்குடாப் பதுங்குகுழிகள் மீது நேற்று முற்பகல் 9.30 அளவில் தாக்குதல் நடத்தின. நாச்சிக்குடாவில் உள்ள பதுங்குகுழிகள் மீது தாக்குதல் நடத்தி பிரவேசித்த 58 வது படைப்பிரிவின் சிப்பாய்கள் வென்னரிகுளம் பிரதேசத்தில் இரண்டு இடங்கள் மீது ஒரேதடவையில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து புலிகளின் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகவில்லை.