01.09.2008.
இலங்கை உட்பட உலகெங்கும் பலவந்தமாகக் கடத்தப்பட்டு பின்னர் காணாமல்போவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், சாட், பிலிப்பைன்ஸ், சூடான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலேயே பலவந்தமாக காணாமல்போவோரின் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட 25 ஆவது சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு “பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக காணாமல்போவோர் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் ஐ.நா. அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
உலகின் அனைத்துப் பாகங்களிலும் வாழும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களென அனைத்துப் பிரிவினர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் பலவந்த ஆட்கள் காணாமல்போதல்கள் மிகவும் பயங்கரமானதொரு செயற்பாடாக உருவெடுத்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், சாட், பிலிப்பைன்ஸ், சூடான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பலவந்தமாக காணாமல்போவோரின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதுதவிர அல்ஜீரியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் காணாமல்போவோர் தொகை அதிகரிப்பதாக அறிக்கைகள் கிடைத்திருக்கின்றன.
இவ்வாறு காணாமல்போனவர்களில் மனித உரிமை ஆர்வலர்கள், மதத் தலைவர்கள், வெவ்வேறுபட்ட இனக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களென அனைத்துப் பிரிவினரும் உள்ளடங்குகின்றனர்.
உலகின் பல பாகங்களிலும் இடம்பெறும் காணாமல்போதல்கள் தொடர்பாக அறிக்கையிடப்படுவதில்லை. காணாமல்போனவர்களைக் கண்டறிவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. உலகிலுள்ள ஏனைய அமைப்புகளும் இது தொடர்பாகக் கவனம் செலுத்த முன்வர வேண்டும்.
இதுதவிர, பலவந்தமாகக் காணாமல்போதல்களிலிருந்து சகலரையும் பாதுகாக்கும் சர்வதேச பிரகடனத்தை அனைத்து அரசாங்கங்களும் உறுதிப்படுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றோம்.
காணாமல்போதல்களை தடுக்கும் அல்லது வேரோடு அழிக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவதுடன் பாதிக்கப்பட்டவர்கள் தமது உரிமைகளை அடைவதற்கான நீதி விசாரணைகளுக்கும் உதவ வேண்டுமெனவும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
காணாமல்போனவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கங்களுக்கும் காணாமல்போனோரின் உறவினர்களுக்குமிடையில் ஒரு இணைப்புப் பாலமாக இவ் அமைப்பு செயற்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.