அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வருமானத்திற்கு அதிகமாக 654 சதவிகிதம் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குத் தொடர்ந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை. இதனைத் தொடர்ந்து வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் அமெரிக்க டாலர்கள், சொகுசுக்காரகள், 300 பவுன் நகை என கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வீரமணி. “லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களைப் பறிமுதல் செய்ததாக செய்திகள் தொடர்ந்து பத்திரிகைகள், மீடியா, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. எனக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.
நடந்த சம்பவங்களில் உண்மை இருந்தால் அதைப் பத்திரிகைகளில் வெளியிடலாம். பத்திரிகைகள் தர்மத்துடன் நடந்துகொள்ள வேண்டும். என்னுடைய வீட்டில் ரெய்டு நடத்தி முடிந்தபிறகு என்னென்ன எடுக்கப்பட்டது என்று என்னிடம் ஒரு நகல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் நான் கையெழுத்து போட்டிருக்கிறேன்.
என்னிடம் இருந்து 2 ஆயிரத்து 746 கிராம் தங்க நகைகள், அதாவது சுமார் 300 பவுன், 2,508 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்), ரொக்கப் பணமாக 1000 ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய்க் கட்டு ஒன்று, இதுதவிர 4 ஆயிரத்து 600 ரூபாய் என மொத்தம் 5,600 ரூபாய் மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் என்னிடம் இருந்து பறிமுதல் செய்திருந்தனர்.
நான் தேர்தலில் போட்டியிட்டபோது என்னுடைய அபிடவிட்டிலேயே 300 பவுனுக்கும் அதிகமாக நகைகள் இருப்பதாகக் கணக்குக் காட்டியிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு என்னுடைய நகைகள் என்னிடமே திருப்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டன. எனது மகள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க இருக்கிறார். அவர் வசதிக்காக அமெரிக்க டாலர்கள் வாங்கி வைத்திருந்தேன்.
சிறு வயதில் இருந்தே எனக்கு கார்கள் என்றால் பிரியம். நான் 7-ம் வகுப்புப் படிக்கும்போதே பென்ஸ் கார் வைத்திருந்தேன். என்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது. அது பழமையான கார். வின்டேஜ் கலெக்சன்தான் அது.
எங்கள் குடும்பம் பெரிய வியாபாரக் குடும்பம். ஆண்டுதோறும் நான் வருமான வரி செலுத்துகிறேன். எல்லாவற்றுக்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது. கணக்கில் வராமல் எதுவுமே எங்களிடம் இல்லை.
நிலைமை இப்படி இருக்க, பொய்யான தகவல் மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. மணல் குவியல் இருக்கிறது என்கிறார்கள். புதிய கட்டுமானப் பணிகளுக்காக மணல் வாங்கி வைத்திருக்கிறோம். அதற்கான ஆவணங்கள், ரசீது என்னிடம் உள்ளன.
நான் மிகவும் எளிமையானவன். ஆடம்பரத்தை விரும்பாதவன். கார்கள் மீதுதான் பிரியமே தவிர மற்றபடி எதுவும் என்னிடம் இல்லை. திட்டமிட்டுத் தவறான தகவல்கள் பத்திரிகைகள் வாயிலாகப் பரப்பப்படுகின்றன. உண்மை இதுதான். பத்திரிகைகள் என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.என் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என கூறினார்.