26.10.2008.
ஜனநாயக ஆதரவு இயக்கத் தலைவர் ஆங் சான் சூ கி (63) உள்ளிட்ட சிறைக் கைதிகளை மியான்மர் ராணுவ அரசு விடுதலை செய்ய இந்தியா உள்ளிட்ட அண்டைநாடுகள் வற்புறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
ஆங் சான் சூ கி சிறைவைக்கப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் 13 ஆண்டுகள் ஆகிறது. சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூ கியுடன் மேலும் 178 பெண் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை உடனடியாகவும் நிபந்தனை ஏதுமின்றியும் ராணுவ அரசு விடுதலை செய்ய அண்டை நாடுகளான இந்தியா, சீனா மற்றும் ஆசியான் நாடுகள் வற்புறுத்த வேண்டும். தவறான நிர்வாகம், அடக்குமுறையால் மியான்மர் அனைத்திலும் தோல்வி கண்டுவருகிறது. மியான்மர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டால் அது இந்த பிராந்தியத்துக்கே நன்மை பயக்கும் என்று மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.
ஆங் சான் சூ கி 1989 ல் கைது செய்யப்பட்டது முதல் அவருக்கு சிறையே வாழ்க்கையாகிவிட்டது. சாதாரண கைதிகளை விடவும் மோசமாக அவர் நடத்தப்படுகிறார். இருப்பினும் நாட்டின் பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காணவே அவர் விரும்புகிறார் என்று மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வலியுறுத்தல்: இதனிடையே, ஆங் சான் சூ கியை உடனடியாக மியான்மர் ராணுவ அரசு விடுதலை செய்யவேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஆங் சான் சூ கி வீட்டுக் காவலில் சிறைவைக்கப்பட்டு அக்டோபர் 24ம் தேதியுடன் 13 வருடங்களாகிறது என்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் தெரிவித்துள்ளார். இவரை விடுவிப்பது உலக நாடுகளுடன் மியான்மர் மீண்டும் சேர முதல்படியாக அமையும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.