போர் முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. சென்ற வருடம் மே மாதம் போர் முடிவடைந்த நிலையில் முட் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை 180 நாட்களுக்குள் அதாவது ஆறு மாதங்களுக்குள் குடியமர்த்தி விடுவதாகச் சொன்னது இலங்கை. இதைத்தான் இந்தியாவும் தமிழக மக்களுக்குச் சொன்னது. ஆனால் ஒரு வருடங்களுக்கு மேலாகியும் மக்களை முழுமையாக இன்னமும் விடுவிக்க வில்லை. முகாம்களில் அடைபட்ட மக்கள் குறித்த எண்ணிக்கையைக் கூட சரியாகச் சொல்லாமல் மறைத்து வருகிறது இலங்கை அரசு. போருக்குப் பின்னர் மட்டும் சுமார் 15,000 பேரையாவது முகாம்களுக்குள் கொன்று குவித்திருக்கிறது என்று அஞ்சப்படுகிற நிலையில், எப்போது மக்களை விடுவிப்பார்கள் என்றே தெரியவில்லை. இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடையே பேசிய இலங்கை அமைச்ச பெர்ணாண்டோ சுமார்
60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெவ்வேறு மூன்று முகாம்களில் இன்னும் தங்கியுள்ளனர். அவர்களை அவர்களது பழைய வசிப்பிடங்களில் கடந்த ஏப்ரல் மாதத்துக்குள் குடியமர்த்துவதற்கு கெடு விதிக்கப்பட்டது. ஆனால் தமிழர் பகுதிகளில் இன்னும் சில இடங்களில் கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால் முகாம்களில் உள்ளவர்களை குடியமர்த்துவது மேலும் தாமதமாகும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முகாம்களில் உள்ளவர்கள் அனைவரும் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என்று தமிழர் மறுவாழ்வுக்கான புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மில்ராய் பெர்னாண்டோ தெரிவித்தார். முகாம்களில் உள்ள தமிழர்கள் தங்கள் பழைய வசிப்பிடங்களுக்கு செல்ல ஆவலாய் உள்ளனர். இருப்பினும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ஏராளமான ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை கண்டுபிடித்து அகற்றும் பணி இன்னும் முடியவடையவில்லை. மேலும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை கண்டுபிடித்து கைப்பற்ற வேண்டும் என்றார் பெர்னாண்டோ.