கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யக்கோரி அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. இதனால் வியாபார ஸ்தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
எனினும் அரச அலுவலகங்கள் வழமை போல் இயங்குகின்ற போதிலும் பாடசாலை மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான கல்முனை, சாய்ந்தமருது, நிந்துவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுள்ளது. இதேவேளை பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவில்லை. இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அஸாத் சாலியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில பிரதேசங்களில் குறிப்பாக இராணுவம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் போன்றோர் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் ம்ற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளை அழைத்து வியாபார நிலையங்களை மூட வேண்டாம் எனவும் ஹர்த்தால் அனுஸ்டிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் சாலைகளிலும் பள்ளிவாசல்கள் உட்பட முக்கிய இடங்களுக்கு அண்மித்த பகுதிகளிலும் நேற்று மாலை தொடக்கமே இராணுவம் மற்றும் காவல்துறையினர் வழமைக்கு மாறாக பரவலாக காணப்படுவதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு அனுஷ்டிக்கப்படாத மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும் வழமைக்கு மாறாக இராணுவத்தினர் பரவலாக பிரதான சாலைகளிலும் கேந்திர இடங்களிலும் காணப்படுவதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் அமைப்பு என்றும் கிழக்கு மாகாண தேசிய முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு என்றும் குறிப்பிடப்பட்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கும் பிரசுரங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.