அரசாங்கத்தை ஸ்தாபிக்க மற்றும் கவிழ்க்க தமது அமைப்புக்கு வலுவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய, அந்த அமைப்பின். பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டார். பொது பல சேனா சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துவதாகவும் முடிந்தால் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவினதும் மகிந்த அரசினதும் செல்லப்பிள்ளையான பொதுபல சேனா என்ற பௌத்த நாசி அமைப்பு தமிழ்ப் பேசும் முஸ்லீம்களைத் மிகவும் அவமானகரமாக அவமதித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கொழும்பு சார் முஸ்லீம் தலைவர்களோ இலங்கை அரசின் ஏவல் நாய்கள் போன்று செயற்படுகிறார்கள்.
இதே வேளை பொதுபல சேனாயின் அண்மைக்கால அதிரடி நடவடிக்கைகளால் முஸ்லீம்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர் என அகில இலங்கை ஜம்-இயதுல் உலாமா இன் பொதுச் செயலாளர் ஷயிக் எம்.எம்.ஏ முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்ப் பேசும் இலங்கை முஸ்லீம்களின் தலைமையைக் கொழும்பு சார் தரகு முதலாளிகளே ஆரம்பத்திலிருந்து தக்கவைத்துக்கொண்டுள்ளனர். இலங்கையின் வறிய முஸ்லீம் தமிழர்களின் முதுகில் சவாரி செய்யும் இக் கொழும்புசார் தலைமைகள் இலங்கை அரசின் பிரித்தாளும் தந்திரத்தை நடைமுறைப்படுத்தும் ஏவாலாளிகள். சிறுபான்மைத் தேசிய இனங்களிடையே மோதலை ஏற்படுத்தல், நிலப்பறிப்பிற்கு முஸ்லீம்களைப் பயன்படுத்தல் போன்ற பல்வேறு அரசின் நடவடிக்களை முகவர்களாக நின்று செயற்படுத்தியவர்கள் கொழும்புசார் தரகுமுதலாளித்துவத் தலைமைகள்.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்கள் மத்தியிலிருந்து தலைமைகள் தோன்றுவதை இக் கொழும்புசார் தரகு முதலாளிகள் அனுமதித்ததில்லை. இந்த முரண்பாடுகளை சரிவரப் புரிந்துகொள்ளாதவர்களும் தமிழ்த் தரகுமுதலாளித்துவத் தலைமைகளும் முஸ்லீம்கள் மீது பல கொலை வெறித்தாக்குதலை நடத்தி, அவர்களை கொழும்பு சார் தலைமைகளின் அடிமைகளாக மாற்றின.
கொழும்பிற்கு வெளியால் உழைக்கும் இஸ்லாமியத் தமிழர்கள் மத்தியிலிருந்து தோன்றும் எந்தத் தலைமைகளையும் முளையிலேயே கிள்ளியெறியும் தரகு முதலாளித்துவ முஸ்லீம் தலைமைகள், தமது ஆதிக்கத்தைத் தொடர்ச்சியாகப் பேணிக்கொள்கின்றன.
முஸ்லீம் காங்கிரசை ஆரம்பித்த கிழக்கைச் சார்ந்த அஷ்ரப் கொழும்பு சாராத தலைமையைக் கட்டியேழுப்ப முனைந்தார். பேரினவாதக் கட்சிகளை எதிர்த்து முதல்முதலாக எழுந்த முஸ்லீம்களின் கொழும்பு சாராத தலைமையத் தோற்றுவிக்க முனைந்த அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அஷ்ரப் கொலை செய்யப்பட்டதும், முஸ்லீம் காங்கிரசின் தலைமையை கொழும்பு சார் தலைமைகள் மீண்டும் கையகப்படுத்தின.
ராவூப் ஹக்கீம் முஸ்லீம் காங்கிரசின் ஏகத் தலைவரானார். அஷ்ரப் கொலையின் பின்னணியில் ஹக்கீம் செயற்பட்டார் என்பது ஊரறிந்த ரகசியம்.
தேர்தல் காலங்களில் உரிமை குறித்தும், தேர்தலுக்குப் பின்னர் பிரித்தாளும் தந்திரோபாயத்தையும் பயன்படுத்தும் ஹக்கீம் தலைமையிலான முஸ்லீம் காங்கிரசும் மத அடிப்படை வாதமும் முஸ்லீம்களால் நிராகரிக்கப்பட வேண்டும். இலங்கையில் முஸ்லீம்கள் வாழ வேண்டுமாயின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை.
mmh