1990-கள் முதல் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பேசி வருகிறார். ஊடகங்களில் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு ஒவ்வொரு படத்திற்கும் இதை ஒரு விளம்பரம் போல செய்து வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜக ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வந்து திமுகவை பலவீனமாக்க முயன்றது. ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர நேரடி மறைமுக அழுத்தங்களைக் கொடுத்தது பாஜக. ரஜினியும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதற்கு முன்பே ரஜினி ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றம் என்பது போல ஆக்கி அதில் பல அணிகளை உருவாக்கி வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பும் கொடுத்தார். பின்னர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொல்லி விட்டு ஒதுங்கியும் விட்டார். ஆனால் ரஜினி மக்கள் மன்றங்களும் அதன் நிர்வாகிகளும் அப்படியே இருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பாஜகவினரோடு சேர்ந்து கொண்டு ஆங்காங்கே கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வருவதாகவும், பாஜக பலரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதாகவும் ரஜினிக்கு செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம் திமுகவின் பக்கம் பல ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சாய இது தேவையற்ற அழுத்தங்களை தனக்கு உருவாக்கும் என்பதை உண்ரந்த ரஜினி மக்கள் மன்றங்களை கலைப்பதாக இன்று அறிவித்ததோடு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் அறிவித்து விட்டார் ரஜினி.