சென்னை: எங்களது போராட்டம் குறித்து விமர்சித்து வரும் பிரதமர், மத்திய அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்கு தொடரப்படும் என்று கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறினார். இதுகுறித்து சென்னையில் அவர் நேற்று அவர் அளித்த பேட்டி:
தொண்டு நிறுவனங்கள் வழியாக உதயகுமாருக்கு கோடிக்கணக்கில் பணம் வருகிறது. இந்த பணம் போராட்டத்துக்கு செலவழிக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு, அப்படி குறிப்பிடவில்லை என்ற ரீதியில் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரம் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஐடியா என்ற நிறுவனத்தோடு சம்பந்தப்படுத்தி பேசியுள்ளார். எங்களுக்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் பெரும்தொகையை அளிக்கின்றன. எங்களுக்கு உதவிய 3 தொண்டு நிறுவனங்களின் கணக்கு பரிவர்த்தனைகள் மூடப்பட்டன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த 3 தொண்டு நிறுவனங்கள் எவை என்றே எங்களுக்கு தெரியாது. முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், போதைப் பொருள் கடத்தி 3 மாதம் சிறையில் இருந்தவர் என்று என்னைப் பற்றி பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார். எனவே, நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் இவர்களை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் மீது வழக்கு தொடர உள்ளேன். இதுகுறித்து வக்கீல்களுடன் கலந்தாலோசித்து வருகிறேன். நாங்கள் தூய்மையாக, உண்மையாக போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த போராட்டங் களை சிந்திக்க தெரிந்தவர்கள் ஏற்கவில்லை என்று பிரதமர் பேசியிருக்கிறார். அப்படி எனில் நாங்கள் சிந்திக்க தெரியாதவர் களா? எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.மின் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிக்க வேண்டும். கூடங்குளம் உலையை மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.