16.03.2009.
அல்ஹைடா இயக்கத் தலைவர்கள் ஒசாமா பின்லேடனால் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் புதிய ஒலிநாடாவொன்றை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒலிபரப்பியுள்ளது.
இதில் அரேபியத் தலைவர்கள் மேற்குலக நாடுகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கெதிராக சதி முயற்சிகளை மேற்கொள்வதாக பின்லேடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ் ஒலிநாடா எவ்வாறு பெறப்பட்டதென்பதை அல்ஜசீரனா தெரிவிக்காத போதிலும் இதில் பதிவாகியுள்ள குரல் பின்லேடனின் முன்னைய ஒலிநாடாக்களில் ஒலித்த குரலைப் போன்று இருப்பதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் மற்றும் மேற்குலகத் தலைவர்களுடன் இணைந்து எமது மக்களுக்கெதிராக அரேபியத் தலைவர்களும் சதித் திட்டங்களை தீட்டியுள்ளமை தெளிவாகியுள்ளது. இவ்வாறானவர்களை நடுநிலைவாதிகளென அமெரிக்கா அழைக்கிறது என இவ் ஒலிநாடாவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதில் எந்தவொரு தலைவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை. காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களுக்கெதிராக இஸ்ரேல் போர்க் குற்றங்களை புரிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள இவ் ஒலிப்பதிவு ஜிகாத்தைப் புதுப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் தமது போராளிகள் முதலில் ஈராக்கிலும் ஜோர்தானிலும் எதிரிகளைத் தோற்கடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.