அரசுக்கு ஆதரவு : 3-வது அணி உடைகிறது

முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி மத்திய அரசை ஆதரிக்க முடிவு செய்ததால், 3-வது அணி உடைகிறது. கூட்டணியில் இருந்து வெளியேறும்படி, சமாஜ்வாடி கட்சியை 3-வது அணி தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

புதுடெல்லி, ஜுலை.6-

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி எனப்படும் 3-வது அணியில் சமாஜ்வாடி, தெலுங்குதேசம், இந்திய தேசிய லோக்தளம், அசாம் கணபரிஷத், தேசிய மாநாடு உள்பட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் இந்த கூட்டணியை உருவாக்கினார். காங்கிரசை தீவிரமாக எதிர்க்கும் கட்சிகள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முலாயம்சிங் முடிவு

அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் இடதுசாரிகளின் எதிர்ப்பால் மெஜாரிட்டி பலத்தை இழக்கும் சூழ்நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 39 எம்.பி.க்கள் கொண்ட சமாஜ்வாடி கட்சியை, காங்கிரஸ் கட்சி தன் பக்கம் இழுத்து கொண்டது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் மத்திய அரசை ஆதரிக்க முலாயம்சிங் யாதவ் முடிவு செய்து விட்டார்.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை முலாயம்சிங் சந்தித்து பேசியதை தொடர்ந்து, மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு உறுதியாகி விட்டது.

என்றாலும், 3-வது அணியில் இடம்பெற்று இருப்பதால், அந்த முடிவை இன்னும் அதிகாரபூர்வமாக முலாயம்சிங் அறிவிக்கவில்லை.

3-வது அணி உடைகிறது

முலாயம்சிங் எடுத்துள்ள முடிவு, மூன்றாவது அணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அணியில் உள்ள பிற கட்சிகளான இந்திய தேசிய லோக் தளம், அசாம் கணபரிஷத், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் முலாயம்சிங் யாதவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் 3-வது அணி உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரும், அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா கூறியதாவது:-

இந்தியாவை அமெரிக்காவுக்கு அடிமையாக்க முயற்சிக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை இந்திய தேசிய லோக்தளம் கடுமையாக எதிர்க்கிறது. பாராளுமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை ஓட்டு கோரினால், நாங்கள் எதிர்த்து வாக்களிப்போம். வேறு எந்த கட்சியாவது மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ஆதரிப்போம்.

அணுசக்தி ஒப்பந்தமானது மத்திய அரசை வீழ்ச்சியடைய செய்வதோடு, காங்கிரஸ் கட்சிக்கும் முடிவுரை எழுதும். மத்தியில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைமையில் புதிய அரசு அமையும்.

அவமதிப்பை விரும்பும் சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சியை ஏற்கனவே இரண்டு முறை காங்கிரஸ் அவமானப்படுத்தி இருக்கிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது சமாஜ்வாடி ஆதரித்தது. எனினும் அந்த கட்சியை காங்கிரஸ் கண்டு கொள்ளாமல் அவமதித்தது.

தற்போது மீண்டும் அவமானப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி விரும்புகிறது. அது அவர்களுடைய சொந்த விருப்பம். அந்த கட்சி 3-வது அணியில் இருந்து வெளியேறி விட்டதாகவே நான் கருதுகிறேன். காங்கிரஸ் கட்சியையும், அணுசக்தி ஒப்பந்தத்தையும் எதிர்ப்பதுடன் மூன்றாவது அணியின் கொள்கைகளை ஏற்கும் எந்த கட்சியும் இந்த அணியில் சேரலாம்.

இவ்வாறு சவுதாலா கூறினார்.

மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் பாரதீய ஜனதா கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதா என்பது போன்ற கேள்விகளை அவர் தவிர்த்து விட்டார்.

சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

சமாஜ்வாடி எடுத்துள்ள முடிவு தன்னிச்சையானது. முலாயம்சிங் யாதவ் எங்கள் கட்சியை கலந்து பேசவில்லை. அவர் எடுத்த முடிவு 3-வது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சமாஜ்வாடி கட்சி எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

அசாம் கணபரிஷத்

இதுபோலவே, மற்றொரு முக்கிய கட்சியான அசாம் கண பரிஷத் கட்சியின் தலைவர் பிருந்தாவன் கோஸ்வாமி கூறியதாவது:-

அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பது என்று முடிவு எடுக்கும் முன் மூன்றாவது அணியில் உள்ள பிற கட்சிகளுடன் சமாஜ்வாடி கட்சி ஆலோசித்து இருக்க வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி தொடர வேண்டுமா அல்லது வெளியேற்ற வேண்டுமா என்று முடிவு எடுக்க இருக்கிறோம்.

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து மூன்றாவது அணியில் உள்ள பிற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். காங்கிரஸ் கட்சியையோ அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் உடன் நட்புறவை வைத்துள்ள எந்த கட்சியுடனும் நாங்கள் எத்தகைய உறவையும் தொடர முடியாது.

இவ்வாறு கோஸ்வாமி கூறினார்.

எந்த தியாகத்துக்கும் தயார்

3-வது அணி தலைவர்களின் எதிர்ப்பு பற்றி சமாஜ்வாடி பொது செயலாளர் அமர்சிங்கிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “அணுசக்தி ஒப்பந்தத்துக்காக எந்த தியாகமும் செய்ய தயார்” என்றார். இதன்மூலம் 3-வது அணி எந்த நேரத்திலும் உடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3-வது அணியில் இடம் பெற்று இருந்த அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள், கருத்துவேறுபாடு காரணமாக ஏற்கனவே இந்த அணியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

அசாம் கணபரிஷத் அணி மாறுமா?

இதற்கிடையில், அசாம் கணபரிஷத், 3-வது அணியில் இருந்து விலகி பா.ஜனதா கூட்டணியில் இணையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அசாம் கணபரிஷத் கட்சியின் உயர்மட்ட குழுவினர் நேற்று பா.ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்கள்.

அப்போது அசாம் மாநிலத்தில் காங்கிரசை தோற்கடிக்க `மெகா கூட்டணி’ அமைப்பது குறித்து விவாதித்தனர். இதுபற்றி அசாம் கணபரிஷத் தலைவர் பிருந்தாவன் கோஸ்வாமியிடம் கேட்டதற்கு, அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் அல்லாத கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியில் திரட்டுவதே எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம் என்றார்.