ஒரு நாட்டில் இருக்கும் சட்டமானது அக்காலத்தின் ஆளும் வர்க்கத்தின் விருப்பமென மார்க்ஸிசம் குறிப்பிடுகிறது. தனது மூலதனம் எனும் பிரசித்தமான புத்தகத்தில் கார்ல் மார்க்ஸ் நீதியின் உயிர் சொத்துக்களாகும் என குறிப்பிட்டுள்ளார். சட்டம் தொடர்பாக மேற்கூறிய தத்துவார்த்த அறிமுகமானது எமது நாட்டின் அடிப்படை சட்டமான அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நினைவுகூற வேண்டியுள்ளது.
எமது நாட்டு மக்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழாகும். 1948ல் பெயரளவிலான சுதந்திரத்துடன் இலங்கைக்கு அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்திய சோல்பரி சாமி உள்ளிட்ட ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டது. அதன் பின் 1972ல் பழைய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி குடியரசு யாப்பு சிறிமா அம்மையாரின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அறிமுகஞ் செய்தது. அதன் பின்னர் 1978ல் தற்போதய யாப்பு அறிமுகப்படுத்தபட்படதுடன் ஜே.ஆர் ஜயவர்தனா அரசாங்கமே அதை தயாரித்தது. இவ் மூன்று யாப்புகளும் மக்களின் விருப்பத்துடன் தயாரிக்கப்பட்டு மக்களின் அங்கிகாரத்தை பெற்றவைகள் அல்ல. மாறாக ஆட்சியாளர்களின் தேவைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு மக்கள் மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டவைகளாகும். இப்போது மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சியின் தேவைகளுக்காக திருத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எமது நாட்டு வரலாற்றில் அரசியலமைப்பினை மாற்றுவதற்கான அதிகாரம் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆட்சியிலிருந்தவர்கள் அரசியலமைப்பை மாற்றினர் அது தமது அதிகாரத்தை பலப்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இப்போது மஹிந்த ராஜபக்ஷ தயாராகிவருவது, வேறு எதற்குமல்ல. தமது அதிகாரத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைத்து முதலாளித்துவத்தை கொண்டுச் செல்வதற்கேயாகும். அதாவது ஆளும் வர்க்கத்தின், ஆளும் கும்பலின், விருப்பத்தை மீண்டும் சட்டமாக மாற்றியமைப்பதற்காகும்.
ஐ.தே.க. அரசாங்கம் 1978ல் அறிமுகப்படுத்திய தற்போதய அரசியல் யாப்பில் உள்ள மிக பாதகமான ஜனநாயக விரோத நிறுவனம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்ற ஜனநாயகத்தை பலப்படுத்தும் யாப்பு திருத்தமொன்றுக்காக ஜே.வி.பி ஆரம்பம் முதலே குரலெழுப்பி வந்துள்ளது 2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தனது முதலாவது பதவிக்காலம் முடிவடையும் முன்னர் இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் தனது முதலாவது பதவிக்காலம் முடிவடையும் முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு பதிலாக மேலும் 6 வருடத்திற்கு நீடிப்பதற்கான நடவடிக்கையிலேயே செயற்பட்டு வருகிறார். எப்படியாயினும் 2009ல். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது பிரதான சுலோகமாகவும் அதை செய்யக்கூடிய உண்மையான தகைமை மஹிந்தவுக்கு மட்டுமே இருக்கிறதென்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தர்க்கித்தனர்.
எப்படியாயினும் தற்போது நாட்டில் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் நிறைவேற்று ஜனாதிபதிமுறையை ஒழிப்பதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளபோதிலும், அதிகாரத்தை பெற்றுக் கொண்ட நபர் அதை ஒழிக்க தயார் இல்லாமையே பிரதான சிக்கலாக உள்ளது.
கடந்த பொதுத் தேர்தலின்போது ஐ.ம.சு. கூட்டமைப்பு அரசியலமைப்பை மாற்றுவதற்காகவே ஆட்சியதிகாரத்தை கேட்டது. புதிய யாப்பிற்காக மூன்றில் இரண்டு அதிகாரத்தை தரும்படி மக்களிடம் கேட்டது. ஆனால் தேர்தலில் அவர்களுக்கு மூன்றில் இரண்டு கிடைக்கவில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகாரம் இல்லாவிட்டாலும் அதற்கு அண்மித்த அதிகாரத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் அந்த அதிகாரத்தின் மூலமாக தாங்களுக்கு சாதகமான முறையில் அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.
புதிய யாப்பு திருத்தம் தொடர்பாக ராஜபக்ஷ அரசாங்கம் ஆரம்பத்தில் கடும் அவசரத்தை வெளிக்காட்டியது. அதற்கான காரணமும் மிகத் தெளிவானது. தமது அதிகாரம் பலவீPனமடையும் முன்னர் தமக்கு பலம் இருக்கும் போதே அரசியல் சட்டத்தை மாற்றுவதே அவர்களது நோக்கமாகும். ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதல்ல. நிறைவேற்று ஜனாதிபதிக்கு தற்போதைய யாப்பில் இருக்கும் இரண்டு தடவை எல்லையை நீக்கி பல தடவைகள் ஜனாதிபதியாவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதாகும். அது முடிசூடா ராஜகுமாரனுக்காக சிம்மாசனத்தை பாதுகாத்துக் கொள்வது தந்தை அரசனின் கடமை பொறுப்பாக அமைந்திருக்கிறது. அதற்கிணங்க இந்த வருடம் ஜூன் மாதத்தில் சமர்ப்பித்த வரவு ‐ செலவு விவாதம் முடிவடைந்தவுடன் ஜூலை இறுதிப் பகுதியிலோ அல்லது ஆகஸ்ட் ஆரம்பத்திலோ குறிப்பிட்ட திருத்தத்தை முன்வைக்க போவதாக அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் அறிக்கை விட்டுள்ளனர்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையின் சர்வதிகார போக்கை கொண்டு குடும்ப ஆதிக்கத்தை பாதுகாக்க ராஜபக்ஷ ஆட்சியினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு வழமைபோல் ஜே.வி.பி.யே முன்னணி வகித்தது. ஜனநாயகத்தை நேசிக்கும் மக்கட் பிரிவினரிடமிருந்தும் எதிர்ப்பும் அரசாங்கத்தின் உள்ளேயிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ராஜபக்ஷ அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தங்களது குடும்ப ஆட்சியை தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரத்தின் இரண்டு தடவை எல்லையை நீக்கிக் கொள்வதுடன் அதை தாமதமின்றி செய்தாக வேண்டும். ஆனால் மக்களின் எதிர்ப்பினால் அரசியல் திருத்த முயற்சி பாராளுமன்றத்தில் தோல்வியடையுமானால் ராஜபக்ஷ அரசாங்கத்தின் வீழ்ச்சியின் ஆரம்ப குறியீடாக அது மாற்றமடைவது தவிர்க்க முடியாது.
ராஜபக்ஷ இப்படியான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் அந்த நெருக்கடியிலிருந்து அவரை காப்பாற்றுவதற்கு தற்போது முன்வந்திருப்பவர் வேறு யாருமல்ல ஐ.தே.க. யின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாகும்.
அரசியல் திருத்தம் தொடர்பாக இப்போது அரசாங்கம் ‐ ஐ.தே.க. வுக்கு கிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது ரணில் ‐ மஹிந்த பேச்சுவார்த்தைகளில் தொடங்கி அரசாங்கம் ஐ.தே.க. பேச்சுவார்த்தையாக விரிவடைந்துள்ளது இந்த பேச்சுவார்த்தைகளுக்கு நிகழ்ச்சி நிரலோ யோசனைகளோ இல்லாதபோதும் பல்வேறு வழிகளில் பேச்சுவார்ததை தொடர்கிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறைக்குப் பதிலாக ஷஷநிறைவேற்று பிரதமர்|| பதவி தொடர்பாகவும் புதிய தே ர்தல் சட்டம் தொடர்பாகவும் பேசுவதாக கூறப்படுகிறது. ஆனால், உத்தேச நிறைவேற்று பிரதமர் பதவி என்ன? அதன் அதிகார வரையறை என்ன? நிறைவேற்று பிரதமர் தெரிவு செய்வதெப்படி? என்பது தொடர்பாக எதுவும் தெளிவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கான இப்போதுள்ள இரண்டு தடைவை எல்லையை நீக்குவது கஷ்டமென தெரிவதினால், அதற்குப் பதிலாக நிறைவேற்று ஜனாதிபதி பதவியையே ஷநிறைவேற்று பிரதமர்| ஆக பெயரை மாற்றி கால வரையறையின்றி கொண்டு செல்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ அடிமனதில் விரும்புவார் என்பது தெளிவாகும்.
சில வாரங்களுக்கு முன்னர் ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக ஷவீதிப்போராட்ட|த்திற்கு தயாராகும்படி கேட்டுக்கொண்டிருந்த ஐ.தே.க, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிரான எதிர்ப்பு வீறுகொண்டெழும்போது ராஜபக்ஷ ஆட்சியுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு செல்வதை தற்செயலாக கருத முடியாது. ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட போதிலும் ராஜபக்ஷ அரசாங்கம் இப்போது பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. பொருளாதார ரீதியாக நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதை வரவு செலவு திட்டம் கோடிட்டு காட்டுகிறது. வரவு ‐ செலவுத் திட்டத்திற்கு எதிராக அரசாங்கத்திற்கு பெரும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. உரிமைகளையும் மானியங்களையும் கேட்டு மக்கள் போராட தொடங்கியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் ஷஷநாட்களை கடத்துவதற்காக|| மக்களின் கவனத்தை திசைத்திருப்புவது அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது. அரசியலமைப்பு திருத்தத்தின்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக அணிதிரளும் மக்கள் எதிர்ப்பினை தணிப்பது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது. அதேபோல் ஐ.தே.க. தலைவருக்கும் பல நெருக்கடிகள் தோன்றியுள்ளன. தனது தலைமைத்துவத்திற்கு எதிராக தோன்றிய கிளர்ச்சிக்கு அவர் முகம் கொடுத்துள்ளார். நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவது எப்படிபோனாலும் கட்சியின் அதிகாரத்தை பாதுகாத்துகொள்ள வேண்டியதேவை அவருக்கு உள்ளது. இந்த தேவைகள் அனைத்தும் ஒருங்கிணையும்போது ரணில் மஹிந்தவுடனும் மஹிந்த ரணிலுடனும் இணக்கப்பாட்டுடன் செயற்படும் நிலை தோன்றுகிறது. பொதுவாக அவர்கள் இருவரும் எதிர்நோக்கும் நெருக்கடிகளும் முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளும் இருவரையும் இணக்கப்பாட்டிற்குள்; செயற்பட வற்புறுத்துகிறது.
ரணில் ‐ மஹிந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னால் இவைகள் மட்டுமல்ல அவர்கள் சார்ந்த வர்க்கத்தின் குறிக்கோள்களும் அடங்கியுள்ளன. அதிகாரத்திற்காக இரு அணிகளாக போட்டியிட்டாலும் இவர்கள் இருவரும் ஒரே வர்க்கத்தின் பிரதிநிதிகளாவர். அதற்கேற்ப தமது அரசியல் கட்சிகளின் குறிக்கோள்களைப் போன்றே ஷஷமுறைமை|| சவாலுக்கு ஆளாகும்போது ஷஷமுதலாளித்துவ முறைமையை|| பாதுகாத்துக் கொள்வதற்காக வர்க்க நோக்கத்துடன் அவர்கள் ஒன்றாக செயற்படும் விதத்தை வரலாறு காட்டுகிறது. ஐ.தே.க. உட்கட்சி பூசல்களினாலும் தொடர்ச்சியாக தேர்தல் தோல்விகளினாலும் நலிவடைந்துள்ளது. இந்நிலையில்; நாட்டில் தோன்றியுள்ள அரசாங்க எதிர்ப்பு பெரும் எதிர்பலையாக வளர்ச்சியடையும்போது அதற்கு தலைமைதாங்குவதற்கு ஐ.தே.க. வினால் முடியாது.
இதனால் அரசாங்க எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் தலைமை தவிர்க்க முடியாதவாறு ஜே.வி.பி உள்ளிட்ட போராட்ட சக்திகளின் கைகளுக்கு செல்வதை தவிர்க்க முடியாது. அதற்கிணங்க அரசாங்க எதிர்ப்பு போராட்டம் தோன்றுவதை தடுப்பதற்கு அரசாங்கத்தின் இயலாமையும், அப்படி தோற்றம்பெறும் போராட்டங்களை தங்களது தலமை வரையறைக்குள் கொண்டுவருவதறந்கு ஐ.தே.க. காட்டிவரும் இயலாமையும் கடைசியில் ராஜபக்ஷ அரசாங்க மட்டுமல்ல சமூக முறையையே இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்த்தும் என்பது இவர்கள் அறியாத விடயமல்ல. இதனால் தாங்களது வர்க்கத் தேவைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர். இதுவே இன்றைய ரணில் ‐ மஹிந்தவின் பேச்சுவார்த்தையாகும். நிறைவேற்று அதிகார, ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும்படி வலியுறுத்தி தொடர்வதற்கிருந்த ஆர்ப்பாட்டத் தொடர் ஷநிறைவேற்று பிரதமர்| கலந்துரையாடலின் மூலமாக பலவீனமடையும் சந்தர்ப்பத்தை நிராகரிக்க முடியாது. ரணில் ‐ மஹிந்தவின் பேச்சு வார்த்தையை சிறுவிடயமாக கருத முடியாதிருப்பது இதனாலாகும்.
தற்போதைய சமூக முறைக்கு எதிராக போராடும் இடதுசாரி சக்திகளினதும், ஜனநாயகத்தை நேசிக்கின்ற அனைவரினதும் தற்போதய கடமை இந்தப் பாதகமான அரசியலை இனங்கண்டு அவைகளை தோற்கடிப்பதற்கு புரிந்துணர்வுடன் செயற்படுவதாகும். இப்போது அரசாங்கம் ஷபேச்சுவார்த்தை| மூலமாக ஷஷநாட்களை கடத்துவதற்கு|| ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப் போவதாக கூறியுள்ளது.
ஆனால் போலி பேச்சுவார்த்தைகளின் மூலம் தமது வஞ்சகமான நோக்கத்தை மறைத்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கக் கூடாது. இதனால் பேச்சு நடத்துவதற்கு முன்னர் அதற்கான அடிப்படையாக உள்ள அரசியல் திருத்தத்திற்கான அரசாங்கத்தின் யோசனைகளை விரைவாக நாட்டிற்கு முன்வைக்கும்படி மக்கள் வற்புறுத்த வேண்டியுள்ளது.. நாட்டை ஆள்வது அரசாங்கமென்பதினால் தமது யோசனைகளை முதலில் முன்வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அப்படியில்லாமல் நடத்தப்படும் பேச்சுக்கள் அரசாங்கத்தின் நாட்களை நகர்த்தும் தந்திரமென்பதினால் அவைகளை மக்கள் நிராகரித்தாக வேண்டும். ராஜபக்ஷ ஆட்சியின் குடும்ப ஆதிக்க பேராசை அரசியல் கண்கட்டி வித்தைகளால் மூடிமறைக்க இடமளிக்க கூடாது.
எப்படியாயினும் இப்போதுள்ள நிலமைகளுக்கு ஏற்பவும் நடந்துக் கொண்டிருக்கின்ற சம்பவங்களுக்கு ஏற்பவும் உத்தேச யாப்பு திருத்தமானது ஆளும் வர்க்கத்தின் விருப்பம் எனப்படும் ராஜபக்ஷவின் விருப்பத்தை மக்கள் மீது பலவந்தமாக சுமத்துகின்ற ஒன்றென்பது மிகத் தெளிவு. அது ஆளும் வர்க்கத்தின் விருப்பமாவதுடன் உண்மையில் மக்களின் உரிமைகளுக்கும் தேவைகளுக்கும் எதிரானதாகும். அந்த நிலைமைகளை தோற்கடிப்பதற்காக ஜனநாயகத்தை நேசிக்கின்ற மக்கள் அடங்கிய விரிவான மக்கள் சக்திகளை அணிதிரட்டுவது இன்றைய நாட்களில் தவிர்க்க முடியாத பணியாக உள்ளது. நாம் அதற்கே தயாராக வேண்டும்.
இராமலிங்கம் சந்திரசேகர்
ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர்
இனப்பிரச்சனை தீர்வை பற்றி இவரதும் இவரது கட்சியினதும் கருத்து என்ன என்பதை சந்திரசேகர் முதலில் தெரிவிக்கட்டும்.