சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கான தனது சேவையை நேற்றுடன் முடித்துக் கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியை மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க கிழக்கு மாகாணத்திலுள்ள அலுவலகங்களை மூடிவிடத் தீர்மானித்திருந்தது.
இதன் பிரகாரம் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிராந்திய காரியாலயங்களையும், மூதூர் மற்றும் அக்கரைப்பற்று உப அலுவலகங்களையும் இம்மாதத்துடன் மூடி விட்டு கிழக்கிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளது.
நேற்று முதல் மக்களுக்கான சேவைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக சங்கத்தின் திருகோணமலை மாவட்ட பிராந்திய செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த வாரம் கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் சகல அலுவலகங்களும் மூடப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1990ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறவினர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்துதல், மருத்துவ சேவை, கப்பல் பயணத்திற்கான வழித்துணை உட்பட பல்வேறு வகையில் மக்களுக்கான சேவைகளை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது