கே.பி. அல்லது குமரன் பத்மநாதனுடன் அரசாங்கம் செய்திருக்கும் உடன்படிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டுமென ஐ.தே.க. நேற்று புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.பிரபாகரனுக்குப் பின்னர் புலிகளின் தலைவரான கே.பி.யைக் கைது செய்த அரசு நீதிமன்றத்தில் ஆஜராக்காது அவருக்குத் தேவையான சுகபோகங்களை வழங்கி பராமரித்து வருகின்றதாகவும் அரசு அவருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை வெளிப்படுத்தவேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
முன்னர் பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து தேர்தலில் வென்றது போல் கே.பி.யைக் கொண்டு வாக்குகளைப் பெற முற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வடக்கில் 95% வாக்குகள் பொதுவேட்பாளருக்குக் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனைத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியதாவது;
பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் பயணம் செய்த பஸ் மீது தங்காலை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஒருவர் பலியானதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை நாம் கண்டிக்கின்றோம். இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.அரசாங்கத்தின் பிரசாரம் தோல்வி கண்டுள்ள அதேநேரம், பொதுவேட்பாளருக்கு மக்கள் ஆதரவு பெருகிவருகின்ற நிலையிலேயே அரசாங்கம் தாக்குதல், அச்சுறுத்தல் போன்ற அராஜக வேலையில் இறங்கியுள்ளது. அத்துடன் தேர்தல் சட்ட விதிகளை மீறி செயற்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையாளர் மாகாண அபிவிருத்தியை நிறுத்துமாறு கோரினார். ஆனால், அரசு இது தேசிய வேலைத் திட்டமெனத் தெரிவித்தது. தற்போது தேசிய தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் பாலங்களையும் மதகுகளையும் திறக்கின்றது. ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்பு பன்னிப்பிட்டியவில் பாலமொன்றைத் திறந்து வைத்தார். ஜனாதிபதியே தேர்தல் சட்ட விதிகளை மீறி செயற்படுகின்றார். இவ்வாறான செயற்பாடானது அபாயகரமானதாகும்.
வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தினத்தன்றே தேர்தல் பிரசார பதாகைகள், சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்ட போதிலும் ஜனாதிபதியுடன் பதாகைகளைத் தவிர ஏனைய வேட்பாளர்களது பதாகைகளும் சுவரொட்டிகளும் அகற்றப்படுகின்றன. பொலிஸாரே 11 தொகுதிகளில் சட்டவிரோத பதாகைகள், சுவரொட்டிகள் இருப்பதாக ஒத்துக்கொள்கின்றனர்.
மகிந்த சிந்தனையின் இரண்டாவது வெளியிடப்பட்ட நிகழ்வை அரச தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பை மேற்கொண்டன. இந்த சந்தர்ப்பம் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவில்லை. செய்தியில் ஒளிபரப்புவது வேறு. நேரடி ஒளிபரப்பானது பிழையானதாகும். அதிகாரத்தைப் பாவித்து தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றன. அதேநேரம் அரச சொத்துகள் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளது.
அரச பிரசாரம் தோல்வியடைகின்ற நிலையிலேயே வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்ய முடியுமென்ற தீர்மானத்தை அமைச்சரவையின் மூலம் அரசு கொண்டுவந்துள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி ஊழல் மோசடி மற்றும் அராஜக செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென்ற காரணத்தால் பணத்தை வெளிநாட்டில் வைப்பிட்டு தப்பிச் செல்ல நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
தனது மகிந்த சிந்தனையில் சமுர்த்தி உதவியாளருக்கு 10 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்படுமெனத் தெரிவித்த நிலையில் அதனைச் செயற்படுத்தாது மீண்டும் அதனை 10 ஆயிரம் ரூபாவாக்கப்படுமென்கிறார். மக்கள் 4 வருடத்துக்கு முன் கூறியதை மறந்திருப்பார் என்ற நிலையிலேயே மீண்டும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சமுர்த்தியாளருக்கு ஆயிரம் ரூபாவே அதிகரிக்கப்படும். மக்கள் இதனை மறக்கமாட்டார்கள். எதிர்வரும் 26 ஆம் திகதி இதற்குரிய பதிலை அளிப்பர்.
தற்போது அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை வெளிப்படுத்துமாறு அரசு சேறு பூசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அவ்வாறான உடன்பாடு எதுவும் இல்லாத நிலைமையில் அரசு பொய் பிரசாரத்தை முன்னெடுக்கின்றது.
இரா.சம்பந்தன் அரசியல்வாதி, அவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதுடன், கட்சியின் தலைவராகவும் உள்ளார். அவர் ஜெனரலுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றது. இதற்கு பிரதான காரணம் வடக்கில் 95% வாக்குகள் ஜெனரலுக்குக் கிடைக்கப்போவதாகும் இதில் எமக்கு நம்பிக்கையுண்டு.
சேறு பூசும் அரசாங்கம் கைது செய்யப்பட்ட கே.பி.யை எங்கே வைத்துள்து. நீதிமன்றத்தில் ஆஜராக்காது ஏன் பிரபாகரன் இறந்த பின்னர் கே.பி.தலைவரெனக் கூறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை அரசாங்கம் விசும்பாயவில் அவருக்கு தேவையானதை வழங்கி சுகபோகத்துடன் வைத்துள்ளது. கடந்தமுறை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தது போல் தற்போது தலைவராகியுள்ள கே.பி.யை வைத்து வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. கே.பத்மநாதனுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் செய்துகொண்ட உடன்படிக்கையை வெளியிடுமாறு கோருகின்றோம்.
தற்போது தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. இது ஆரம்பித்த முதல் நாளே சாலியபுர பொலநறுவை முகாம்களிலுள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது அரசு. அதுபோல் திருகோணமலையிலுள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ளவர்களை சுயாதீனமாக வாக்களிக்க இடமளிக்கப்படவில்லை.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெலிகமவுக்கு ஜனாதிபதி வருவதையொட்டி வெலிகம நகர சபைத் தபால் வாக்களிப்பை இடைநிறுத்தியுள்ளது. இது எந்த வகையில் நியாயமானது. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் அச்சுறுத்தலும் தாக்குதலும் இடம்பெற்று வருகையில் தற்போது ரி.56 ரக துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஜனநாயக விரோத போக்கைத் தடுத்து நிறுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி ஊழல் மோசடியை இல்லாமல் செய்ய எதிர்வரும் 26 மக்கள் தீர்மானமெடுக்க வேண்டுமென்றார்.