ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கியிருப்பதை இலங்கையின் நிகழ்வுகள் எதிரொலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் ஆரம்பித்த அரசாங்கத்தின் சறுக்கல்களும், உள் வீட்டு அதிருப்திகளும் நாளுக்கு நாள் வலுத்து வருவதாக அரசாங்கத்தின் முக்கிய வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
முதன் முதலில் அரசாங்கத்துக்கு வெளியே ஆரம்பித்த எதிர்ப்பலை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் வாயிலாக வெளிவந்தது. அதனை சமாளிக்க முடியாமல் பெரும் திண்டாட்டத்தை எதிர்கொண்ட அரசாங்கம் ஒரு கட்டத்தில் அடக்குமுறையைப் பிரயோகித்தும் பார்த்தது. ஆயினும் எதிர்ப்பலை தணிவதற்குப் பதில் தற்போதைக்கு சற்றே அடங்கியுள்ளது என்பது மட்டுமே உண்மை. எந்த நேரமும் அது மீண்டும் வெடித்துக் கிளம்பலாம்.
அவ்வாறான நிலையில் தான் அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. அது நாள் வரை வெளியே இருந்த அரசாங்கத்துக்கெதிரான அதிருப்தி அமைச்சரவை மாற்றத்துடன் அரசாங்கத்துக்கு உள்ளேயே எதிரொலிக்கத் தொடங்கியது. சிரேஷ்ட அமைச்சர்கள் என்ற போர்வையில் ஒதுக்கப்பட்ட அரசாங்கத்தின் முன்னை நாள் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்துக்கெதிரான முதலாவது போர்க்கொடியைத் தூக்கினர்.
அவ்வாறான நிலையில் தான் அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியின் ஊரிலேயே அரசாங்கத்துக்கெதிரான இன்னோர் அடி கடந்த மாதம் விழுந்திருந்தது. அதுதான் பெலியத்தைப் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத் தோல்வியாகும். அங்கு அதிகாரத்தில் இருப்பது மத்தியில் ஆளும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சிதான் என்பதுடன், உறுப்பினர்களாக இருப்பவர்களும் பெரும்பாலும் ஜனாதிபதியின் உறவினர்களாகவே உள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதி பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய காலத்தில் பெலியத்தைத் தொகுதியில் இருந்துதான் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்த வகையில் பெலியத்தையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஜனாதிபதியுடன் தொடர்புபட்டவையாகவே நோக்கப்பட வேண்டும்.
ஆயினும் அங்கு அரசாங்கத்தின் மீதான அதிருப்தி காரணமாக பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
அவ்வாறான பின்புலத்தில் தான் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்பலையைச் சமாளிக்க முடியாமல் தான் எடுத்துச் சென்ற பொதிகளைக் கூட கைவிட்டு தப்பினோம் பிழைத்தோம் என்று இலங்கைக்கு ஓடி வந்திருந்தார்.
அதே காலகட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க அரசாங்கத்தின் தகவல் பரிமாற்றங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி மஹிந்தவின் அரசாங்கம் மீது ஒட்டுமொத்தமாக மை பூசியது. அரசாங்கம் அவமானப்பட்டது.
அது மாத்திரமன்றி முன்னெப்போதுமில்லாத வகையில் அரசாங்கத்துக்கெதிரான போர்க்குற்றங்களை தூக்கிப் பிடித்திருக்கும் சர்வதேச ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மீதான போர்க்குற்ற விசாரணைக்கு தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.
அந்த வகையில் தற்போதைய நிலையில் அரசாங்கம் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் கூட நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது என்பதையே இவை பிரதிபலிக்கின்றன.
அதன் பின் தற்போது மாத்தறை மற்றும் தங்காலை உள்ளுராட்சி மன்றங்களின் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவை இரண்டும் கூட ஆளுங்கட்சியின் நிர்வாகத்தின் கீழ் இருப்பவை தான்.
அதிலும் தங்காலை என்பது ஜனாதிபதியின் வாசஸ்தலமான கார்ல்டன் இல்லம் அமைந்திருக்கும் நகரமாகும். அடிக்கடி ஜனாதிபதி வந்து போகும் இடமாகும். மாத்தறை என்பது ஜனாதிபதியின் தாயாரின் பிறப்பிடமாகும்.
அந்த வகையில் பிரேமதாசவுக்கெதிரான அலை கொழும்பு வாழைத்தோட்டத்தில் இருந்தே முளை விட்டது போன்று மஹிந்தவுக்கெதிரான அலை ஹம்பாந்தோட்டையின் தங்காலைப் பிரதேசத்தில் இருந்தே ஆரம்பமாகியுள்ளது எனலாம்.
இவ்வாறான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நெருக்கடிகளின் முன் மஹிந்தரின் அரசாங்கம் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் தாக்குப்பிடிக்கப் போகின்றது என்பதே அரசியல் விமர்சகர்களின் முன்னுள்ள கேள்வியாகும். அது மஹிந்தவுக்கும் தெரிந்தே உள்ளது.








மகாராசா என்றூ மகிந்தவைக் கொண்டாடுது தேசம் அவரால் அரங்கம் அய்யா துரையப்பா புகழ்பாடுது.கவர்மெந்து உத்தியோகம் பார்க்கும் ஊர்காவற்றூற மக்கள் அவருக்கு கோயில் எழுப்புகிறார்கள்.புளீயங்கூடல் சந்தியைத் தாண்டி வந்தால் வரும் சரவண பொன்னி அம்பாள் கோயிலில் அபிசேகம் செய்கிறார்கள்.அன்னை வேளாங்கன்னி மாதா வரும் அடியோர்கள் வசந்த பேக்கரியில் மகாராசன் மகிந்த பெயரைச் சொல்லி அன்னதானம் செய்கிறார்கள்.இப்படி எல்லாம் இருக்கும் இலங்கையில் அவரது ஆட்சி ஆட்டம் காணூவதாய் கற்பனை காணலாமா,அவருக்கு ஆரோ பில்லி சூனியம் வைப்பதாய் நம்பலாமா?