அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம்’

12.09.2008.

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க போதிய சட்ட ஏற்பாடுகள் நடைமுறையில் இல்லை. விரைவில் புதிய ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்று சமூக சேவைகள், நலன்புரி விவகார பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம். பி. எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிறி இவ்வாறு கூறினார். நுவரெலிய மாவட்டத்தில் முதலில் ஆரம்ப பாடசாலைகளை அமைக்கப் போவதாக கூறிச் செல்லும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பின்னர் அங்கு பிரிவினையை ஏற்படுத்த செயற்படுவதாகவும் இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்னவெனவும் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினரும், விமல் வீரவன்சவின் அணியைச் சேர்ந்தவருமான எம்.டி. என்.பி. ஜயசிங்க, நுவரெலியா மாவட்டத்தில் தற்போது இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பியிருந்த கேள்விக்கு, இடையீட்டு கேள்வியாகவே விமல் வீரவன்ச தனது இந்தக் கேள்வியை கேட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர் பிரேமசிறி, “”அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஒரே மாதிரியாக மதிப்பிட்டு விட முடியாது. தவறாகவும் கருத முடியாது. எனினும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 10 சதவீதம் கூட மக்களுக்கு சென்றடைவதில்லை. பணியாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்கே அதிக நிதி செலவிடப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் நாட்டுக்கு பெருந்தொகை அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இந்நிலையில், அவற்றின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திவிட்டால் அந்த வருமானங்கள் இல்லாமல் போய்விடும். அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் போதிய சட்ட ஏற்பாடுகள் இல்லை. எனவே தற்போது போதிய ஏற்பாடுகளுடைய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’ என்றார்.

இதேநேரம், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் செய்துள்ளமை வெளிப்படையாகவே அகப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு;

“”இவ்வாறான விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. எனினும், கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் மீட்கப்பட்ட போது, அங்கு சில அரச சார்பற்ற நிறுவனங்களின் பொருட்கள் இருக்க கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணைகளை நடத்திய போது, அவை புலிகளினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டவையென சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. எனவே, இவ்வாறான விடயங்களை நன்கு ஆராய்ந்தறிந்தே கையாள வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது’ என்று லயனல் பிரேமசிறி பதிலளித்தார்.

இதன்போது குறுக்கிட்ட என்.டி.என்.பி. ஜயசிங்க எம்.பி., அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று இருக்கும் நிலையில், அந்தக் குழுவினால் இதுவரையான காலப்பகுதியில் இடைக்கால அறிக்கையொன்றாவது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவரான விஜித ஹேரத் (ஜே.வி.பி.) எம்.பி.;

“”சட்டம் தெரிந்தவர்கள் இவ்வாறானதொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்கள். தற்போதைய சட்டத்தின் பிரகாரம் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும் போதிய ஏற்பாடுகள் இல்லை. அதனை நிவர்த்தி செய்யும் வகையிலான புதிய சட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவர தற்போது, சமூக சேவைகள், பாதுகாப்பு, வெளிவிவகாரம் உள்ளிட்ட அமைச்சுகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன’ என்றார்.