இந்தியாவை சேர்ந்த சவீதா ஹாலப்பனாவர், கணவர் பிரவீன் ஹாலப்பனாவருடன் அயர்லாந்தில் வாழ்ந்து வந்தார். 4 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவர் அங்கு பல் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார். இரத்தத்தில் பேக்டீரியா அதிகம் உள்ள செப்டிகேமியா என்ற நோயால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கடுமையான வேதனையில் அவதிப்பட்டு வந்த அவர் தனது கருவை கலைக்கவேண்டி பலமுறை ஹால்வேயில் உள்ள யுனிவர்சிட்டி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இவ்வாறு கடந்த மாதம் சென்றபோது கரு துடிப்புடன் இருந்தது. ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாட்டில் கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கூறி டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.
சவிதாவின் இறப்பை அடுத்து கருக்கலைப்பு மறுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருக்கலைப்பு விதிகளை சற்று தளர்த்தக் கோரி 2 ஆயிரம் பேர் தலைநகர் டப்ளினில் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர்.
இதேபோல், சவிதாவின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் அயர்லாந்து நாட்டு தூதரகம் எதிரே நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சவிதாவின் மரணம் குறித்து விசாரணைக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை ஜேம்ஸ் ரெய்லி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி கூறுகையில், ‘‘விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்மவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால், அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்க அங்கு சட்டம் கொண்டு வரப்படுகிறது. கருக்கலைப்புக்கு குறித்த விஷயத்துக்கு சட்ட ரீதியாக ஒரு தெளிவைக் கொண்டுவர அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை அடுத்தே அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர் அங்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் மரணமடைந்து ஏழு வாரங்கள் ஆன பிறகு இந்தச் சட்டம் அங்கு கொண்டுவரப்படுகிறது.
கருக்கலைப்பு செய்யப்படாததால் உயிரிழந்த சவிதா ஹாலப்பனவர்
தற்போது அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்ட விரோதமான ஒன்றாக உள்ளது. தாயின் உயிருக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஆபத்து உள்ளது என்று கருதப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் சூழல் இருக்கிறது.
எனினும் இதுவரை மருத்துவர்கள் எத்தகைய சூழலில் உறுதியாக கருக்கலைப்பைச் செய்யலாம் என்பது குறித்து அரசு எந்தச் சட்டத்தையும் இயற்றவில்லை.
மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை கடைபிடிக்கும் வகையில், அயர்லாந்து அரசின் நடவடிக்கை அமைகிறது.