(கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது – செய்தி)
அம்மா
இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா
விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்
இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்
அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்
அம்மா
பகல் இரவுகளில் இனிய கதைகள் சொன்னவள்
சோறு கஞ்சி சமைத்து
என் நாவில் ஊட்டியவள்
நிலவு உதித்திருக்கிறது
இரவுத் தங்கத் தட்டின் மீது
இருக்கக் கூடும் நீ ஊட்டும் பால்
பசித்தாலும் கூட நான்
கையேந்த மாட்டேன் அம்மா
வந்துவிடு அம்மா என்னருகே
என் பாற்பற்களால் கடித்துன்
கை விலங்கை உடைக்கட்டுமா அம்மா
– ஷஸிகா அமாலி முணசிங்க
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்