தொழிலமைச்சர் மேர்வின் சில்வா அரலகங்வில, நுவரகல சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. அமைச்சர் குறித்த வர்த்தக நிலைய்த்தில் கண்ணாடிகள், அல்மாரி ஆகியவற்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 75 ஆயிரம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஜயசிங்க அரலகங்வில காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா 35 பேர் கொண்ட குழுவொன்றுடன் நேற்று அரலகங்வில நுவரகல சந்திக்கு சென்று, ‘டேய் சண்டியர்கள் இருந்தால், இறங்கு’ என சத்தமிட்டதுடன் தனது கைத்துப்பாக்கியில் வேட்டுக்களை தீர்த்துள்ளார். அதனையடுத்து ஜயசிங்க என்பவரின் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து 4 அலுமாரிகளை துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தியுள்ளதாக ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கே . சுபசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து காவற்துறையினர் 7 தோட்டக்களை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச்சன்னங்கள் வர்த்தக நிலையத்தின் சுவர்களில் பதிந்துள்ளதாகவும். அத்துடன் வர்த்தக நிலையத்திற்கு அருகில் இருந்த ஒருவர் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாகவும், அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் மறைந்து தன்னை தற்காத்து கொண்டதாகவும் சுபசிங்க தெரிவித்துள்ளார். இந்தசம்பவம் குறிதது அரலகங்வில காவற்துறை பொறுப்பதிகாரி கருணாசிங்க தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.