அமெரிக்கா வீழ்ச்சிப் பாதையில் நடை போடத் தொடங்கியுள்ளது :ஈரான் அதிபர் மகமூத் அகமதினேஜத் .

07.09.2008.

துபாய்: வல்லரசு என்ற தகுதியிலிருந்து அமெரிக்கா சரியத் தொடங்கியுள்ளது. அதன் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வீழ்ச்சிப் பாதையில் அது நடை போடத் தொடங்கியுள்ளது என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதினேஜத் கூறியுள்ளார்.

சீனாவுக்கு வந்த அகமதினேஜத் அங்கு ஈரான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், புஷ் நிர்வாகத்தின் தோல்விகள் அமெரிக்க சாம்ராஜ்யத்தை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதன் ஆதிக்கம் குறையத் தொடங்கி விட்டது.

உலக விவகாரங்களில் அமெரிக்கா மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறிப் போய் விட்டது. அதன் ஆதிக்கம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஜார்ஜ் புஷ் தலைமையில் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் அமெரிக்காவுக்கு தோல்வியே கிடைத்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் நலிவடைந்து விட்டது.

பின் லேடனைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அது நடத்திய போர் தோல்வியையேத் தந்துள்ளது. அதன் நோக்கம் நிறைவேறவில்லை. ஆப்கானிஸ்தானில் நிலைமை சரியில்லை என்று அமெரிக்க ராணுவத் தளபதியே கூறியுள்ளார் என்றார் அவர்.