15.09.2008.
அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றாகிய லீமன் பிரதர்ஸ் நிறுவனம் தாங்கள் திவாலானதாய் அறிவிக்க விண்ணப்பித்துள்ளது.
நியூயோர்க்கில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைச் சுற்றி பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி மற்றவர்கள் நுழையமுடியாதபடி மறித்திருக்கிறார்கள்.
மூடப்படுகின்ற அந்த வங்கியின் பரிதாப நிலையை வழிப்போக்கர்கள் எல்லாம் கூடி நின்று வேடிக்கை பார்க்க, அலுவலக ஊழியர்கள் ஒவ்வொருவராக, கார்ட்போர்ட் பெட்டிகளை தூக்கிக்கொண்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
லீமன் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்வந்திருந்த பாங்க் ஒஃப் அமெரிக்காவும், பிரிட்டிஷ் வங்கியான பார்க்லேஸும் அதிலிருந்து பின்வாங்கவே, தற்போது அந்த நிறுவனத்தை வாங்க எவரும் முன்வராத நிலையில், திவாலானதாய் அறிவிப்பது என்று அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
இதேநேரத்தில், மற்றுமொரு முக்கிய நிதிநிறுவனமான மெரில் லிஞ் நிறுவனத்தை சுமார் 40 பிலியன் டாலர்களுக்கு கையேற்க பாங்க் ஒவ் அமெரிக்கா உடன்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை, உலகின் பெரிய காப்புறுதி நிறுவனமான ஏஐஜி என்று அழைக்கப்படும் அமெரிக்கன் இண்டர்நாசனல் குறூப் என்ற நிறுவனம், அமெரிக்க மத்திய வங்கியிடம் இருந்து 40 பில்லியன் டாலர்கள் அவசர நிதியைக் கோரியுள்ளது.
வரலாறு
ஜேர்மனியில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவரான ஹென்றி லீமன் அவர்கள் அமெரிக்காவின் அலபமாவில் உள்ள மொண்ட்கோமரி நகரில் இந்த நிதி நிறுவனத்தை 1844ல் ஆரம்பித்திருந்தார்.
ஆறு வருடங்களின் பின்னர் அவருடன் அவரது சகோதரர்களான இமானுவலும் மேயரும் இணையவே அந்த நிறுவனத்துக்கு லீமன் பிரதர்ஸ் என்று பெயரிடப்பட்டது.
ஆரம்பிக்கப்பட்டது முதல் இரண்டு உலகப்போர்களையும், 1926இல் ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியையும், 1970 களில் ஏற்பட்ட பெற்றோலியத்துறை நெருக்கடிகளையும்கூட தாக்குப்பிடித்திருந்த இந்த நிறுவனம் தற்போது ஏற்பட்ட அமெரிக்க வீட்டுக்கடன் சந்தை நெருக்கடிகளை தாக்குப்பிடிக்க முடியாமல், 7 பில்லியன் டாலர்கள் நட்டத்தைச் சந்தித்து பலியாகியிருக்கிறது
BBC