கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை அமெரிக்காவில் முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சுக்கு 69 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
விடுதலைப் புலிகளின் பொய்ப்பிரசாரங்களால் இலங்கைக்கு கெட்டபெயர் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், புலிகளுக்கு நிதிசேகரிக்கப்படுவதைத் தடுப்பதற்குமான பிரசாரங்களை அமெரிக்காவில் முன்னெடுப்பதற்காக திறைசேரி வெளிவிவகார அமைச்சுக்கு பெப்ரவரி நடுப்பகுதியில் 69 மில்லியன் ரூபாவை செலவுசெய்திருப்பதாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமாத்திரமன்றி கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு அமைச்சுக்களுக்கென திறைசேரி மேலதிகமாக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. சட்டமா அதிபர் மற்றும் இரண்டு அமைச்சு செயலாளர்களுக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கென அரசாங்கம் 15 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மற்றும் நீர் முகாமைத்துவம் மற்றும் வடிகால் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களுக்கே தலா 5.5 மில்லியன் ரூபா செலவில் வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த அமைச்சுக்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக இவை ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று வீடமைப்புத்துறை அமைச்சு, பொது முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்களுக்கு இந்த மேலதிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
2009ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் கடந்த நவம்பர் மாதமே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இது முன்வைக்கப்பட்ட ஆறு மாதங்கள் ஆவதற்குள்ளேயே அரசாங்கம், அமைச்சுக்களுக்கு மேலதிக ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது.