இஸ்ரேலிய பயங்கரவாத அரசு, அமெரிக்க அரச ஆதரவுடன் பலஸ்தீனிய நாட்டின் மீது நடத்தும் வன்முறை இதுவரை 18 குழந்தைகள் உட்பட 86 அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்துள்ளது. ஆறு மில்லியன் யூத மக்கள் ஜேர்மனியர்களால் கொன்று குவிக்கப்பட்ட பின்னர், மத்திய கிழக்கின் இருதயத்தில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தமது போர் அடிமைகளாகக் குடியேற்றிய யூதர்களால் அமைக்கப்பட்டது தான் இஸ்ரேல் என்ற நாடு. அமெரிக்காவும் மேற்கு ஏகபோக அரசுகளும் தமது மத்திய கிழக்கில் தமது பயங்கரவாத கொலை வெறியை நிறைவேற்றிக்கொள்ள இஸ்ரேலைப் பயன்படுத்திக்கொள்கிறது.

வரலாற்றின் அறியப்படாத காலத்தில் யூதர்கள் வாழ்ந்ததான வரலாற்றுக் கதையாடல்கள் யூதர்களின் சொந்த நிலமாக இஸ்ரேலைப் பிரகடனப்படுத்த உதவியது. செவ்விந்தியர்களின் சிவப்பு இரத்தத்தில் உருவாக்கப்பட்ட நமது உலகத்தின் பேட்டை ரவுடியான அமெரிக்கா, இஸ்ரேலிய சோவனிசத்தின் பின் புலத்தில் செயற்படுகின்றது.
இன்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நத்தானியாகு என்ற முன்னை நாள் இராணுவ அதிகாரியின் மனித குலம் வெட்கித் தலை குனிய வேண்டிய செயற்பாடுகளை “சர்வதேச சமூகம்” ஊக்குவிக்கிறது. பலஸ்தீனம் என்ற இறையாண்மை கொண்ட தேசத்தின் மீது இஸ்ரேலிய சோவனிஸ அரசாங்கம் நடத்தும் தாக்குதலுக்கு அங்கீகாரம் வழங்கும் அமெரிக்க அரசு அப்பாவிப் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி தாக்குதலைத் தொடருமாறு வேண்டுகோள் விடுக்கிறது. நத்தானியாகுவிடம் தொலை பேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க அரச துறைச் செயலாளர் அந்தோனி பிலின்கென் இந்த வேண்டுகோளை விடுத்த அதே வேளை ஹம்மாஸ் அமைப்பைக் கண்டிக்கத் தவறவில்லை.
அமெரிக்கா பின்புலத்தில் செயற்பட அதன் அடிமை அமைப்பான ஐக்கிய நாடுகள் நிறுவனம் மௌனம் காக்க, இஸ்ரேலின் அப்பாவிகள் மீதான கொடிய தாக்குதல் மனிதகுலத்தின் பாதுகாப்பைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் எந்த உப அமைப்புக்களும் மூச்சுக்கூட விடாமலிருப்பதற்குக் காரணம் பைடன் அரசின் அழுத்தம் என்ற செய்திகளை சமூக வலைத்தளங்களில் ஊகங்களாக காணக்கிடைக்கின்றது.
2009 ஆம் ஆண்டு இதே உலக நாடுகளின் ஆதரவோடு வன்னியில் நடத்தப்பட்ட படுகொலைகளை விட வெளிப்படையான கொலைகளை, “கொலை செய்யப்பொகிறோம்” என அறிவித்துவிட்டே நடத்துகிறது இஸ்ரேலிய அரசு.
பலஸ்தீனத்தின் அழுகுரல் கொரோனா கொடுமைகளையும் கிழித்துக்கொண்டு உலகின் மனச் சாட்சியைக் கேள்வி கேட்கும் அதே வேளை மேற்கின் ஊடகங்கள் மோதலுக்குக் காரணம் ஹம்மாஸ் அமைப்புத் தான் என்று நிறுவும் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. பலஸ்தீனியர்கள், யூதர்கள் மற்றும் கிறீஸ்தவர்கள் வாழும் ஜெருசலம் நகரின் ஒரு பகுதி 1967 ஆம் ஆண்டு இஸ்ரேலிய சோவனிச அரசால் ஜோர்டான் நாட்டின் மீது நடத்தப்பட்ட யுத்தத்தின் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்திய இஸ்ரேல் ஜெருசலம் நகரை இஸ்ரேல் என்ற யூத நாட்டின் பிரிக்கவியலாத தலை நகராகப் பிரகடனப்படுத்தியது. அமெரிக்க காட்டுமிராண்டி அரச அதிபர் ரம்ப் இன் அரசு, ஜெருசலம் நகரை யுதர்களின் தலை நகரம் என முதல் தடவையாக அங்கீகரித்து போருக்கான அத்திவாரத்தை நட்டுவத்தது. ஜோ பைடனின் அரசு எந்த மாற்றமும் இன்றி ரம்பின் கொள்கையைப் பின் தொடர பலஸ்தீனியர்கள் தம்மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராட வேண்டிய சூழலுக்கு இழுத்துவரப்பட்டனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் பச்சைக்கொடி காட்டியதும், கிழக்கு ஜெருசலத்தை ஆக்கிரமிக்க வலதுசாரி குடியேற்றவாதிகளை இஸ்ரேலிய அரசு தூண்டியது. தமது சொந்தப் பிரதேசமான கிழக்கு ஜெரூசலத்தில் பெரும்பான்மையாக வாழும் பலிஸ்தீனியர்கள் குறிவைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அங்கு பலஸ்தீனிய தேர்தலை அமைதியாக நடத்த இஸ்ரேலிய அரசு தடை போட்டது. ஆக்கிரமிப்பு வெஸ்ட் பாங் எல்லையைத் தாண்டி நீண்டு சென்றது.
கிழக்கு ஜெருசலம், வெஸ்ட்பாங் உபட்ட பகுதிகள் தமக்கானதே என்று ஆயுதம் தாங்கி யூத்தக் குடியேறிகள் அப்பாவிப் பொதுமக்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் மிருகத்தனமாகத் தாக்கி வெளியேறுமாறு பணித்தனர். வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களைச் சேதப்படுத்திச் சூறையாடினர். இத் தாக்குதல்களுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்திய அப்பாவிப் பொது மக்கள் மீது வன்முறையாளர்களை ஏவிய இஸ்ரேலிய அரசு அவர்களைக் கைது செய்து சிறைகளை நிரப்பிற்று.
போலிஸ் இராணுவம் போன்ற அரச படைகள் பாதுகாப்பு வழங்க யூதக் குடியேறிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியும், தடியடி நடத்தியும் பாலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்தனர். இளைஞர்களும் சிறுவர்களும் குறிவைத்து தாக்கப்பட்டனர். இதனை எதிர்த்த ஹம்மாஸ் அமைப்பு திருப்பித் தாக்க முடிவெடுத்து ரொக்கட் தாக்குதல் நடத்த ஆரம்பித்த போது தான் இஸ்ரேலிய பயங்கரவாத அரசு அப்பாவிப் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இன்றைய மோதலுக்கு ஹம்மாஸ் அமைப்பு மட்டுமே காரணம் என்ற அமெரிக்காவினதும் ஏனைய ஏகபோக ஆக்கிரமிப்பு நாடுகளதும் பிரச்சாரம் உண்மையை மூடி மறைப்பது மட்டுமன்றி இஸ்ரேலை மேலும் பயங்கரவத நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான அப்பாவிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற ஹம்மாஸ் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது என்ற உண்மை குழி தோண்டிப் புதைக்கப்பட்டாலும், சிக்காகோ நகரிலும் லண்டன் நகரிலும் ஏனை உலகின் முக்கிய நகரங்களிலும் இஸ்ரேலின் கொலை வெறிக்கு எதிரான மக்களின் போராட்டம் எல்லா மக்களையும் ஏமாற்றிவிட முடியாது என்பதை வெளிக்காட்டுகிறது.
இன்று 14.05.2021 பெரும் தொகையான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் காசாவின் உட்பகுதியில் குவிக்கப்பட்டு பொது மக்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.