- முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கேரள கவர்னர் பதவி!
- பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீதான கொலை வழக்கை ரத்து செய்ததற்கான வெகுமதி!
- நீதித்துறை மீதான மோடி அரசின் தொடர் அத்துமீறல்
அன்பார்ந்த நண்பர்களே!
06.09.2014 அன்று கேரள மாநில ஆளுநராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பதவி ஏற்றிருக்கிறார். இதை முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் அகமதி, பட்நாயக் உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர். கேரள வழக்கறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பதவியில் இருக்கும் போதே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது போல் படம் காட்டிய நீதிபதி சதாசிவம் காங்கிரசுக்குப் பயந்து வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினார். இவ்வழக்கை பாராளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்க்கு ஜெயலலிதா பயன்படுத்த உதவி செய்தார். ஓய்வு பெற்றபின் மகா கேவலமாக அரசு தரும் எந்தப் பதவியையும் ஏற்கத் தயார் என அறிவித்தார். இப்பேற்பட்ட பெருமைகள் கொண்ட நீதிபதி சதாசிவம் மோடி அரசின் கவர்னர் பதவியை ஏற்பதன் மூலம் பெயரளவுக்கு இருக்கும் நீதித்துறை சுதந்திரத்தையும் வீழ்த்தியுள்ளார்.
நீதிபதி சதாசிவம் ஓர் ஊழல் பேர்வழி என்பது ஊரறிந்த இரகசியம் என்றாலும் நீதிபதி சதாசிவத்திற்கு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் கள்ளக் கூட்டும் இவ்விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 8, 2013 அன்று துளசிராம் பிரஜாபதி என்பவரை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீது சி.பி.அய் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சவுகான் அடங்கிய அமர்வு. இவ்வழக்கின் பின்னணி மிகவும் கொடூரமானது. திகில் படங்களை மிஞ்சக் கூடியது.
2002 இனப்படுகொலையின்போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபியூனலின் முன், 2002 பிப்ரவரி 27 அன்று நடந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை ஹரேன் பாண்டியா வாக்குமூலமாக தெரிவித்தார். இந்தத் தகவல் மோடிக்குத் தெரிந்ததைத் தொடர்ந்து மார்ச்23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. இக்கொலை வழக்கில் மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கர் அலி உள்ளிட்ட 11 பேரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
கடந்த 2004-ம் ஆண்டு சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட் என்ற அதிகாரியிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும் பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் என்பவனின் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருக்கின்றனர். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அரசுத் தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட்.
பின்னர் 2005-ம் ஆண்டு சோரபுதீன் ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டனர். “இந்தப் போலி மோதல்
கொலையை” கண்ணால் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006-ம் ஆண்டு இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான்.
அதன்பின் சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டார். 2010-ல் குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது இதற்காக பதவி விலகிய அமித் ஷா உடனடியாக மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சபர்மதி சிறையிலும் இருந்தார். நிபந்தனை பிணையில் வெளிவந்த அமித் ஷா இரண்டு ஆண்டுகள் குஜராத் மாநிலத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இப்போது, பாஜகவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அமித் ஷா மீது போடப்பட்ட சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி ஆகியவர்களைக் கொன்ற போலி மோதல் வழக்குகளில் துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ததற்குத்தான் நீதிபதி சதாசிவத்திற்க்கு இன்று கவர்னர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே முன்வைத்துள்ளது. இதற்கு மோடியோ, அமித் ஷாவோ உரிய பதில் அளிக்கவில்லை.
மேற்குறிப்பிட்டது சதாசிவம் பதவி பெற்றதின் ஒரு பரிமாணம்.
சட்டப்படி தீர்ப்பளித்தார் சதாசிவம் என்று கருதும் சிலர் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-சங் பரிவார் கட்சியினர் கவர்னர் பதவிக்கு காவடி தூக்கிய நிலையில் நீதிபதி சதாசிவத்திற்கு இப்பதவி வழங்கப்பட்டதன் பின்னணியை விளக்க வேண்டும்.
இன்றைய மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த ஆண்டு தனது வலைப்பக்கத்தில் எழுதியது “I have held a strong view that Judges of the Supreme Court and the High Courts must not be eligible for jobs in the Government after retirement. In some cases the pre-retirement judicial conduct of a judge is influenced by the desire to get a post retirement assignment”. இன்று இக்கருத்து மாறியதன் பின்னணியை அருண்ஜேட்லியும்,பி.ஜே.பி.யும் விளக்க வேண்டும்.
ஏற்கனவே உச்ச, உயர்நீதி மன்ற நீதிபதிகள் பலர் தமது பதவியின் இறுதிக் காலத்தில் அரசுக்கு சாதகமாக இருந்து கமிசன்கள், தீர்ப்பாயங்களில் பதவிகள் பெரும் நடைமுறை உள்ளது. அதன் அடுத்த நிலை ஆளுநர் போன்ற நேரடி அரசியல் நியமனங்களை ஏற்பது. ஏற்கனவே சட்ட ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசுப் பதவிகளை ஏற்கக் கூடாதென வலியுறுத்தியுள்ளது. அத்தனையையும் மீறி மோடி, சதாசிவத்திற்கு இப்பதவியை வழங்கியுள்ளார். மோடி அரசு நீதித்துறை சுதந்திரத்தின் மீது வீசிய முதல் குண்டு தனக்கெதிராக வழக்காடிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை நீதிபதி ஆக விடாமல் தடுத்தது. அடுத்து கொலீஜியம் முறையை ஒழித்து தேசிய நீதித்துறை ஆணையம் என்ற பெயரில் நீதித்துறையை காவிமயமாக்க முயற்சிப்பது. மூன்றாவதாக நீதிபதி சதாசிவத்திற்கு கவர்னர் பதவி வழங்கியது.
இந்நடவடிக்கைகள் மூலம் மோடியும், அமித் ஷாவும் இந்திய நீதித்துறைக்கு சொல்லும் செய்தி இதுதான். எங்களை எதிர்த்தால் கோபால் சுப்பிரமணியத்திற்க்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும். ஆதரித்தால் சதாசிவம் போன்ற பதவி வெறிபிடித்தலையும் இழிபிறவிகளுக்கு கிடைத்தது போல பதவி கிடைக்கும்.
நீங்களும் தேர்வு செய்யுங்கள் இழிபிறவியாக வாழ்வதா? இல்லை அநீதிகளை எதிர்த்துப் போராடுவதா? என்பதை.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கேரள ஆளுநர் பதவி மோடி அரசால் வழங்கப்பட்டதைக் கண்டித்தும், பதவி பேரத்தின் பின்னணியான அமித் ஷா-மோடி-சதாசிவம் உறவை அம்பலப்படுத்தியும், நீதித்துறை மீதான மோடி அரசின் தொடர் அத்துமீறலைக் கண்டித்தும் மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பில் கடந்த 05.09.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துண்டறிக்கைகளை விநியோகம் செய்து கொண்டே தொடங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.
நீதித்துறை மீதான மோடி அரசின் அத்துமீறலையும், நீதிபதி சதாசிவம்-அமித் ஷா-மோடி-கள்ள உறவை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 30 வழக்கறிஞர்களும், மனித உரிமை பாதுகாப்பு மைய உறுப்பினர்களும், ஒத்தக்கடை சில்வர் பட்டறைத் தொழிலாளர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மோடி அரசின் நீதித்துறை மீதான தொடர் தாக்குதலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் பலர் உரையாற்றினர்.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான பீட்டர் ரமேஷ்குமார், செயலாளர் ஏ.கே.மாணிக்கம், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.ரத்தினம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க இணைச் செயலர் அப்பாஸ், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாராயணன், ராஜீவ் ரூபஸ் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
உரையின்போது, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் எப்படிப்பட்ட ஊழல் பேர்வழி, பாலியல் பொறுக்கி என்பதைக் குறிப்பிட்டு, சதாசிவம் ஓய்வு பெற்ற பின் பதவிக்காக வெளிப்படையாக அலைந்து திரிந்ததையும், தற்போதைய கவர்னர் பதவி பேரத்தின் பேரில்தான் பெறப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினர். மூவர் தூக்கு வழக்கிலும் சதாசிவத்தின் நடவடிக்கை சந்தேகத்திற்குரியதாக, காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததாக சந்தேகித்தனர்.
மேலும் தடா சட்டத்திற்க்கு ஆதரவாக தீர்ப்பளித்ததற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியனுக்கு 5-வது ஊதியக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டதையும், கூடங்குளம் வழக்கில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததற்கு முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணிக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் பதவி வழங்கப்பட்டதையும், இன்னும் நீதிபதிகள் சவுகான், சொக்கலிங்கம், முருகேசன், பாசா உள்ளிட்ட பலருக்கு அரசுப் பதவிகள் வழங்கப்பட்டது, அரசுக்கு ஆதரவாக அவர்கள் தீர்ப்பு வழங்கியதற்கா? என்ற சந்தேகம் எழுப்பினர். நீதிபதிகள் ஓய்வு பெற்றபின் அரசு பதவிகளை ஏற்கக் கூடாது என வலியுறுத்தினர். நீதித் துறையை காவிமயமாக்கும் சதிக்கெதிரான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தொடர் போராட்டத்தை பாராட்டிப் பேசினர்.
இறுதியாக ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டத் துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும் போது, “நீதிபதி சதாசிவம் ஓர் ஊழல் பேர்வழி என்பது ஊரறிந்த இரகசியம் என்றாலும் நீதிபதி சதாசிவத்திற்கு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் கள்ளக் கூட்டும் இப்பதவி பேரத்தில் அம்பலமாகியுள்ளது. இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே முன்வைத்துள்ளது. இதற்கு மோடியோ, அமித் ஷாவோ உரிய பதில் அளிக்கவில்லை.
2002 குஜராத் கலவரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் என ஒரு தவறும் செய்யாத அப்பாவி மக்கள் 2000 பேர் பி.ஜே.பி.யால் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சிதான் துளசிராம் பிரஜாபதி என்பவரை போலி என்கவுண்டரில் குஜராத் போலீசு சுட்டுக் கொன்றது. இக்கொலை தொடர்பான வழக்கில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீது சி.பி.அய் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சவுகான் அடங்கிய அமர்வு. இதற்கு பிரதிபலன்தான் கவர்னர் பதவி.
இப்பேரத்தில் மோடி-அமித் ஷா பங்கை யாரும் பேச மறுக்கிறார்கள். இதற்கு வெளிப்படையான விசாரணை தேவை. பா.ஜ.க சிறுபான்மை இனத்தைச் சர்ந்த மக்களுக்கு மட்டுமல்ல பார்ப்பான் தவிர அனைத்து சமூக மக்களுக்கும் எதிரி. பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தர்மபுரி நத்தம் காலனி, சிதம்பரம் நடராஜர் கோவில், நாடு முழுவதும் நடந்து வரும் தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டங்கள் என எதையும் பா.ஜ.க.ஆதரித்ததில்லை. ஆனால் சங்கராச்சாரிக்கு ஆதரவாகப் போராடுகிறார்கள்
இன்று நாடு பாசிசத்தை நோக்கிச் செல்கிறது. ஆர்.எஸ்.எஸ் நபர்கள் அனைத்துப் பதவிகளிலும் நியமிக்கப்படுகிறார்கள். நீதித் துறையை காவிமயமாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. இதை எதிர்த்துப் பெரியார் பிறந்த மண்ணிலிருந்து போராட்டத்தை தொடங்குவோம். மோடி-அமித் ஷா-நீதித் துறை ஊழலுக்கு எதிராகப் போராடினால் ஊடகங்கள் செய்தி வெளியிட மறுக்கின்றன. மோடி-அமித் ஷாவிடம் அனைத்துக் கட்சிகளும், சகல ஊடகங்களும் சரணடைகிறார்கள். ஆனால் மனித உரிமை பாதுகாப்பு மையம் மக்களுக்கான தன் கடமையை எச்சூழலிலும் நிறைவேற்றும். எங்கள் உயிரைக் கொடுத்தாவது மோடியின் பாசிசத்தை தமிழகத்தில் முறியடிப்போம்” என்றார்.
இறுதியாக ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான ராஜசேகர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.
தகவல்:
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை
98653 48163, 94434 71003
நன்றி : வினவு