அமரிக்காவில் பணநெருக்கடி

நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களின் முழி பிதுங்கப் போகிறது என்பது மட்டும் உண்மைதான் என்று அமெரிக்கப் பொருளாதாரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். பட்ஜெட் பற்றாக்குறை 16 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணக்கிட்டிருந்தார்கள். தற்போது வெள்ளம் தலைக்கு மேலே ஓட ஆரம்பித்திருக்கிறது. 20 லட்சம் கோடியைத் தொட்டுக் கொண்டிருக்கிறது என்று தங்கள் கணக்கை திருத்தி வருகிறார்கள்.

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் போட்டியிடுகையில் எந்தவிதமான அணுகுமுறையையும் கடைப்பிடிக்கலாம் என்பதை தங்கள் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கையாக பெருமையாகக் கூறிக் கொண்டிருந்தனர். இதனால் ஒரு நிறுவனம் சரிந்து விழுந்தால் அதைத் தூக்கி நிறுத்த வேண்டியதில்லை என்று கூறியதோடு, அவ்வாறு தூக்கி நிறுத்திய அரசுகளை பலவீனமான அரசுகள் என்றெல்லாம் கூட அமெரிக்கா விமர்சித்தது. தற்போது அடமானக் கடன் விவகாரத்தால் அமெரிக்க பொருளாதாரமே வீழ்ச்சியடைந்துள்ள வேளையில், பல்வேறு நிதி நிறுவனங்களுக்கு முட்டுக் கொடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு முட்டுக் கொடுப்பதற்கும் அமெரிக்காவிடம் பணம் இல்லை. கடன் வாங்கியே இந்த வேலையை அமெரிக்கா செய்து வருகிறது. இதற்கிடையில் அடமானக் கடன் பிரச்சனை தளர்வதற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று ஐ.எம்.எப்(சர்வதேச நிதியம்) எச்சரித்துள்ளது. அடமானக் கடன் பிரச்சனையால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சுமார் 40 லட்சம் கோடி ரூபாயை இழக்க நேரிடும் என்று ஏப்ரல் மாதமே ஐ.எம்.எப் கணித்திருந்தது. அமெரிக்க பொருளாதார சரிவு, தனியார் நிறுவனங்கள் கடன் வாங்குவதிலும் எதிரொலித்துள்ளது. முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடாமல் ஆட்களைக் குறைப்பதன் மூலம் தங்கள் லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன.

அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ள அடமானக் கடனில் கிட்டத்தட்ட பாதியை ஃபேன்னி மா மற்றும் ஃபிரெட்டி மாக் ஆகிய இரு நிறுவனங்கள் வழங்கியுள்ளன. இவை நிலைகுலைந்தால் கணக்கில் அடங்காத நிதி நிறுவனங்கள் மூழ்கி விடும். தற்காலிகமாகவாவது இந்த நிறுவனங்களை சீரமைத்து, நிதி உதவியை வழங்க அமெரிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்று அமெரிக்க முன்னாள் நிதித்துறை செயலாளர் லாரி சம்மர்ஸ் கூறுகிறார். ஆனால் இந்தத் தீர்வு ஒன்றும் அவ்வளவு எளிதாக ஏற்பட்டுவிடாது.

தற்போது 120 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் தேசியக் கடன், 360 லட்சம் கோடி ரூபாயாக

எகிறி விடும்.

இதோடு அமெரிக்காவின் பிரச்சனைகள் நின்றுபோய் விடவில்லை. 2008 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும் என்றும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 1.3 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்றும் இரு வாரங்களுக்கு முன்பு ஐ.எம்.எப் கூறியிருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கலாம் என்று எச்சரித்த்துள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் இரு வேட்பாளர்களும் இந்தப் பிரச்சனை குறித்து பேசினாலும் நிரந்தரத்தீர்வு குறித்த ஆலோசனை எதையும் முன்வைக்கவில்லை.

கார்ட்டர் காலத்திலிருந்து குறைந்து கொண்டே வந்த பட்ஜெட் பற்றாக்குறை, சீனியர் புஷ்சின் காலத்தில் பெரும் வீழ்ச்சியைக் கண்டு, கிளிண்டன் காலத்தில் எழுந்து நின்றது. தற்போது ஜூனியர் புஷ்சின் நடவடிக்கைகளால் அது மீண்டும் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு நாடுகளில் ராணுவ ரீதியிலான தலையீடு அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் பெரும்பகுதியை அதில் செலவு செய்வதில்தான் கொண்டு விட்டுள்ளது. வரப்போகும் அதிபரின் தலையில் பெரும் சுமையை ஏற்றிவிட்டு புஷ் ஓய்வெடுக்க சென்று விடுவார். எந்த வளரும் அல்லது வளர்ச்சி குன்றிய நாட்டின் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று புதிய அதிபர் தேடி அலையத் தொடங்குவார்.