அப்காஸியா மற்றும் தெற்கு அஸெட்டியாவின் விடுதலையை அங்கீகரித்துள்ளது ரஷ்ய நாடாளுமன்றம்!

25.08.2008.
ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற பிராந்தியங்களான அப்காஸியா மற்றும் தெற்கு அஸெட்டியாவின் விடுதலையை அங்கீகரித்து ரஷ்ய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

இந்த இரு பிராந்தியங்களும் ஜோர்ஜியப் பகுதிகளாகவே சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுவந்துள்ளன. அந்த நிலையில்தான் ரஷ்யத் துருப்பினரும் இந்த மாதத்தில் முன்னதாக அங்கு நுழைந்திருந்தனர். ரஷ்யா தனது நிலையை கடுமையாக்கிவருகிறது என்பதன் மற்றுமொரு அறிகுறியாக, ஜோர்ஜியத் துறைமுக நகரமான போட்டிக்குள் வரும் பொதிகளை ரஷ்ய படைகள் பரிசோதிக்கவிருக்கிறார்கள் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

அப்காஸியா மற்றும் தெற்கு அஸெட்டியாவின் விடுதலையை ஆதரித்து ரஷ்ய நாடாளுமன்றம் வாக்களித்திருப்பதை ஜோர்ஜிய அதிபர் மிக்காயல் சாகஷ்விலி கண்டித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க துணை அதிபர் டிக் செனி அடுத்த மாத துவக்கத்தில் ஜோர்ஜியா செல்வார் என்று அமெரிக்க அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

BBC.