10.03.2009.
அடுத்த நூற்றாண்டில் வெப்பநிலை அதிகரிப்பானது மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டிவிடுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
2015 லிருந்து 3 சதவீத பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை வருடாந்தம் அதிகளவுக்கு குறைத்தாலும் கூட 2050 இல் வெப்பநிலை அதிகரிப்பை 2 சதம பாகை அளவுக்கு மேலாக அதிகரிக்க விடாமல் தடுப்பதற்கான சந்தர்ப்பம் அரைவாசியளவுக்கே கிட்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தாமதம் காட்டப்படுவது ஒவ்வொரு தசாப்தத்திலும் வெப்பநிலை அரைச் சதம பாகையளவு உயர்வடைவதற்கு காரணமாகிவிடும்.
2 சதம பாகை அளவுக்கு மேல் வெப்பநிலை அதிகரிக்காமல் மட்டுப்படுத்துவது தொடர்பாக ஐரோப்பியத் தலைவர்கள் முழு அளவுடனான உறுதிப்பாட்டில் உள்ளனர். இதற்கு மேலாக வெப்பநிலை அதிகரிக்குமானால் மக்களின் வாழ்வுக்கும் சுற்றாடலுக்கும் பாதிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் 2 சதம பாகை வெப்பநிலை அதிகரிப்பானது கடும் உஷ்ணத்தையும் வரட்சியையும் ஏற்படுத்தும். 2003 இல் ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கானோர் பலியானதற்கு காரணமான அனல் காற்றிலும் பார்க்க மோசமான நிலைமையை ஏற்படுத்தும்.
கொப்னேஹனில் இவ்வாரம் இடம்பெறவுள்ள மாநாட்டில் ஹாட்லே வானிலை திணைக்களத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த எச்சரிக்கையை முன்வைக்கவுள்ளனர். டிசம்பரில் இது தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடொன்று இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு கொப்னேஹனில் இவ்வாரம் மாநாடு இடம்பெறுகிறது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தத் தேவையானளவுக்கு வாயு வெளியேற்றத்தை எவ்வாறு மட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக இணக்கம் காண டிசம்பரில் இடம்பெறும் ஐ.நா. மாநாட்டில் உலகத்தலைர்கள் முயற்சி செய்வார்கள்.
2 சதம பாகைக்கும் மேலாக வெப்பநிலை அதிகரிக்குமானால், நீர்விநியோகம் உட்பட முக்கிய வளங்கள் தொடர்பான யுத்தங்களுக்கு போர் மூளும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
பயிர்ச்செய்கையில் வீழ்ச்சி ஏற்படுவதுடன் மலேரியா, டெங்குகாய்ச்சல் போன்ற நோய்களும் இதனால் பரவும் ஆபத்து உள்ளது.
நாம் எதனைச் செய்தாலும் 2 சதம பாகை அளவுக்கு வெப்பநிலை அதிகரித்துச் செல்லும் நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மிகவும் வித்தியாசமான உலகில் நாம் வாழப்போகிறோம் என்று ஹாட்லே நிலையத்தின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவின் தலைவர் விக்கிபோல் லண்டன் ரைம்ஸுக்கு கூறியுள்ளார்.