லங்கா ஈ நியூஸ் இணையத்தளப் பணிமனை தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இலங்கையில் கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் எந்தளவுக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதன் ஜனநாயக விரோத அளவை எடுத்துக் காட்டியுள்ளது. இவ் ஊடகப் பணிமனை எரியூட்டலை நோக்கும் போது அது திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டுள்ளதாகவே காண முடிகிறது. அதன் மூலம் சகல ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் கடந்த கால ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் இனிமேலும் தொடரும் என்பதற்கான சமிக்கையாகவும் அமைந்துள்ளது. இதனை எமது புதிய – ஜனநாயக மாச்சிச – லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் லங்கா ஈ நியூஸ் இணையத் தளப் பணிமனை எரியூட்டப் பட்டமையைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில், கடந்த முப்பது வருட யுத்த காலம் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஒரு இருண்ட காலமாகவே இருந்து வந்தது. ஆனால் யுத்தம் முடிவடைந்து இருபது மாதங்கள் முடிவடைந்த பின்பும் அந்த நிலை மாறவில்லை என்பதையே தொடரும் ஊடகங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஏற்கனவே இவ் லங்க ஈ நியூஸ் இணையத்தளம் மீதான தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளது. ஏற்கனவே அதன் ஆசிரியர் ஐரோப்பாவில் தஞ்சமடைந்துள்ளமையும் அதன் ஊடகவியலாளர் காணாமல் போய் உள்ளமையும் மேற்படி இணையத்தளப் பணிமனை எரியூட்டப் பட்டமையைத் திட்டமிட்ட தாக்குதல் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
ஆதலால் தொடரும் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் மீதான திட்டமிட்ட இது போன்ற தாக்குதல்களுக்கு மக்கள் தான் பதில் கூற வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்திக் கூறுகின்றது.
– சி.கா.செந்திவேல் –
பொதுச் செயலாளர்