அரசின் யுத்தத்தின் முடிவுடன் கொலைகள், கடத்தல், கைது, காணாமல்போதல் என்பனவற்றிற்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் அவற்றை தொடர்ந்தும் எதிர்கொள்ளும் அவலநிலையிலேயே தமிழ் மக்களின் அவல வாழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார்.
வடக்கின் தேர்தல் மற்றும் தற்போதைய நாட்டின் அரசியல் நிலைமைகள் தொடர்பாக அவர் வழங்கி செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கேள்வி : இடம்பெயர்ந்து பெரும் அவலங்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் துன்பப்பட்டிருக்கும் நிலையில் யாழ். மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை என்பவற்றுக்கான தேர்தல்களை அரசு நடத்த முற்பட்டதன் உள்நோக்கம் என்ன?
பதில் : வடக்கின் இன்றைய அவலங்கள் மத்தியில் அரசாங்கம் அங்கு அவசர அவசரமாகத் தேர்தல்களை நடத்துவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உள்நோக்கங்கள் இருக்கின்றன. யுத்தத்தால் மட்டுமன்றி தேர்தல்களை நடத்தியும் வடக்கை வெற்றி கொண்டிருப்பதாகத் தெற்கின் மக்களுக்கு காட்ட வேண்டியுள்ளது. அதன் மூலம் தமது ஆட்சி அதிகார இருப்பிற்கும் எதிர்கால நீடிப்பிற்கும் உரம் பெற்றுக் கொள்ள நிற்கின்றது. கிழக்கில் செதது போன்று ஆளும் கட்சியின் நேரடி அதிகாரத்தை வடக்கிலும் நிலை நாட்டி அங்கு இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் மீண்டுவிட்டது என்ற ஒரு தோற்றத்தைக் காட்டவும் முயற்சிக்கின்றது.
கேள்வி : யாழ் .மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் தொடர்பான உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
பதில் : தேர்தல்கள் வடக்கில் நடத்தப்பட வேண்டியவை என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அத்தகைய தேர்தல்களுக்கு முன்பாக முன்வைக்கப்பட வேண்டிய விடயங்களும் நிறைவேற்ற வேண்டிய தேவைகளும் அவசியமானவைகளாகும். யுத்தம் முடிவுக்கு வந்ததாயினும் அதற்குக் காரணமாக இருந்த தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எதுவுமே முன்வைக்கப்படவில்லை. அதேவேளை சுமார் மூன்று லட்சம் வரையான வடக்கின் மக்கள் முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில் அவல வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள் . இவர்களை விடவும் கடந்த பத்தொன்பது வருடங்களுக்கு மேல் வடக்கின் பல பகுதிகளில் இருந்தும் இரண்டு லட்சம் வரையிலான மக்கள் வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறே ஒரு லட்சம் வரையான முஸ்லிம் மக்களும் சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. அதேவேளை வடக்கின் இயல்பு வாழ்வு ஜனநாயகம் சுதந்திரம் என்பன அமுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றன. இந்நிலையில் வடக்கின் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தல்களை நடத்துவதில் எவ்வித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே வடக்கில் தேர்தல்கள் நடத்துவதற்கு முன்பாக அங்கு இயல்பு வாழ்வு, ஜனநாயக சுதந்திரம் மீளக்குடியமர்வு என்பனவற்றை அரசாங்கம் முன்னெடுப்பதையே எமது கட்சி வற்புறுத்துகிறது.
கேள்வி : யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் அரச தரப்பினரும் கூறுகின்ற நிலைமையிலும் கைது, கடத்தல், காணாமல் போதல் என்ற நிலைமைகளை தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனுபவித்துக் கொண்டேயிருக்கிறார்கள், இது தொடர்பாக?
பதில் : கடந்த மூன்று தசாப்த காலத்தின் யுத்த போராட்டச் சூழலில் கொலைகள், கடத்தல், காணாமல் போதல், கைது போன்ற கொடூரங்களைத் தமிழ் மக்கள் அனுபவித்து வந்துள்ளனர். யுத்தத்தின் முடிவுடன் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவை தொடர்கின்றன. இவற்றை யார் செகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிகின்றன. ஆனால் அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்க முடியாத அளவுக்கு அதிகாரத்தினதும் ஆதிக்க அரசியலினதும் மறை கரங்கள் மறிக்கின்றன. இதுபோன்ற ஒரு நிலை சிங்கள மக்கள் மத்தியிலும் முன்பு இடம்பெற்றிருந்தது. ஆதலால் இவற்றை நிறுத்துவதற்கு அவசரகாலச் சட்டம் பயங்கரவாதத்தடைச்சட்ட சட்டங்கள் முதலில் அகற்றப்படல் வேண்டும். அதற்கான குரல்கள் அனைத்து ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள், ஊடகங்களிடமிருந்து ஓங்கி ஒலிக்க வேண்டும். அதற்குரிய தீர்க்கமான சக்தி மக்களாக மட்டுமே இருக்க முடியும்.
கேள்வி : இன்றைய நெருக்கடியான நிலைமையில் தென்னிலங்கை புத்திஜீவிகள், இடதுசாரிகள், பொது அமைப்புகள் என்பன ஒன்றுபட்டு இணைந்து செயற்படுவதற்கு தயக்கம் காட்டுவதேன். அது தொடர்பான புதிய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடென்ன?
பதில் : தென்னிலங்கையில் அவ்வாறு தயக்கங்கள் காட்டப்படுவதற்கு பல்வேறு அரசியல் சமூகக் காரணங்கள் உள்ளன. அத்துடன் அரசாங்கம் மேற்படி சக்திகள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தங்களையும் அடக்குமுறைகளையும் பிரயோகித்து வந்துள்ளமை முக்கியமானதாகும். அதேவேளை தமிழர் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பெயரிலான தவறான கொள்கைகளும் மோசமான நடவடிக்கைகளும் தென்னிலங்கையின் புத்திஜீவிகள், பொது அமைப்புகள், இடதுசாரிகள் ஒன்றிணைந்து செயற்படுவதைச் சாத்தியமற்றதாக்கி வைத்தது. ஆனால் இந்நிலை தற்போது மாற்றமடைய ஆரம்பித்துள்ளது. தமிழ் மக்கள் படும் அவலங்களும் அரசியல் தீர்வின் அவசியமும் உணரப்பட்டு வருகின்றன. அண்மையில் எமது கட்சி தற்போதைய அவலநிலை அரசியல் தீர்வு அவற்றுக்கான கோரிக்கைகள் உள்ளடங்கிய பத்து அம்சங்களை முன்வைத்துள்ளோம். அவற்றை ஏனைய ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளும் அமைப்புகளும் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் எனக் கோரி வருகின்றோம்.
கேள்வி : தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் மற்றும் இலங்கையின் இன நெருக்கடி விவகாரம் அது தொடர்பான மாற்று வேலைத்திட்டம் என்ன?
பதில் : இலங்கையில் தோன்றி வளர்ந்த பேரினவாத ஒடுக்குமுறைகளை எதிர்த்து தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளைவென்றெடுப்பதற்கு அன்றிலிருந்து இன்று வரையான தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அனைத்தினாலும் இயலாமல் போவிட்டது. அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்து கொண்டமை அவர்கள் கொண்டிருந்த பழைமைவாதக் கருத்தியலும் அதிலிருந்து வகுக்கப்பட்ட கொள்கைகளும் நடைமுறைப் போராட்டங்களுமாகும். அவை தோல்விகளை மட்டுமன்றி தமிழ் மக்களைப் பேரவலங்களுக்குள்ளும் தள்ளியுள்ளது. இன்று தமிழ் மக்கள் ஒரு அரசியல் வனாந்தரத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பிற்கும் எதிர்காலத்திற்கும் யதார்த்த நிலைமைகளோடு இணைந்ததும் சாத்தியமானதுமான புதிய கொள்கைகள் முன்வைக்கப்படுவது அவசியம். தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் வகையில் தமது கரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். தலைவர்கள், வீரர்கள், மேப்பர்களாக வருவதை மக்கள் அனுமதிக்கக் கூடாது. அல்லது வெளியில் இருந்து வரும் ஆதிக்க, ஆணைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் இடமளிக்கக் கூடாது. வரலாற்றுத் தவறுகளை கண்டறிந்து சுயநிர்ணய உரிமைக்கான சுயாட்சி முறைமையின் கீழ் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமது இருப்பையும் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தக் கூடிய ஒரு பரந்துபட்ட மாற்று வேலைத்திட்டமே இன்று தேவையாகி உள்ளது. இதனை முன்னெடுக்க மக்கள் சக்தியே முக்கியமானதாகும். இதில் தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் முன்னிலை வகுத்து சக்திமிக்க வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் விடுதலைக்கான மாற்று அரசியல் வேலைத்திட்டம் அமைய வேண்டும் எனப் புதிய ஜனநாயகக் கட்சி முன்மொழிகின்றது.
கேள்வி : இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் மலையக அரசியல் தலைமைகள் தொடர்பான உங்கள் நிலைப்பாடென்ன?
பதில் : மலையக தொழிலாளர்களையும் மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தொழிற்சங்க அரசியல் தலைமைகள் வெவ்வேறு பெயர்களில் உள்ளனரே தவிர; நோக்கிலும் போக்கிலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். புதியவர்கள் என முகம் காட்டி வருவோரும். அதே வகையினர் தான் பிரதிநிதிகளாவது பதவிகள் பெறுவது, சொத்து, சுகம் காண்பது, ஏமாற்று வாக்குறுதிகள் வழங்குவது என்பனவற்றுடன் உரிய தருணங்களில் தொழிலாளர்கள் மக்களின் உரிமைகளுக்குக் கழுத்தறுப்புகள் செது கொள்வது அவர்கள் பின்பற்றும் தொடரான செயற்பாடுகளாகும். இவர்கள் ஒருபோதும் மலையக மக்களின் உரிமைகளுக்காகத் தம்மை மாற்றிக் கொள்ள மாட்டாதவர்கள். ஆதலால் இவர்களை நம்பி ஏமாற்றங்களுக்கு உள்ளான மக்கள் தாம் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களும் மக்களும் குறிப்பாக இளந்தலைமுறையினரும் அரசியல் சமூக தளங்களில் தீவிரமான சிந்தனைப் போக்கையும் செயற்பாட்டுத் திறனையும் கொண்டிருக்க வேண்டும். புதிய பாதையில் மாற்றுக் கொள்கைகளுடன் பயணிக்க வேண்டும். அதற்கான திசை காட்டுவதில் புதிய ஜனநாயகக் கட்சி ஏற்கனவே முயற்சிகளைச் செது வருகின்றது. அதன் மூலம் மாற்று அரசியல் தொழிற்சங்க வேலைமுறையினை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.
கேள்வி : இந்திய வல்லரசு உட்பட இலங்கையில் அதிகரித்து ஆதிக்கம் செலுத்த முற்படும் மேலாதிக்க சக்திகளின் போக்கே இன்றைய அவல நிலைக்கு பிரதான காரணமென்று கூறப்படுகிறது. இது தொடர்பான புதிய அணுகுமுறை எவ்வாறிருக்க வேண்டும்?
பதில் : இலங்கையில் மேலாதிக்கம் செலுத்துவதில் இந்திய வல்லரசும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளும் போட்டியிட்டே வந்துள்ளன. இப்போட்டியின் இழு கயிறாக தேசிய இனப்பிரச்சினையே இருந்து வந்திருக்கிறது. கடந்த முப்பது வருடகால யுத்தம் போராட்டம் என்ற ஆடுகளத்தில் மேற்படி மேலாதிக்க சக்திகள் பிரதான பாத்திரம் வகித்து வந்துள்ளன. அதன் மூலம் சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் உயிர் இழக்கவும் கொத்தழிவுகள், இடப்பெயர்வுகளுக்கு உள்ளாகவும் நேர்ந்தது.
இன்று மூன்று லட்சம் மக்களின் பேரவலத்திற்கும் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் இதே இந்திய, அமெரிக்க மேலாதிக்க சக்திகள் காரணமாக இருந்துள்ளன. இந்த உண்மை நிலையினை எவ்வகையிலும் மறைக்க முடியாது. எனவே இவ் ஆதிக்கப் போட்டி புதிய புதிய வடிவங்களில் தொடர்வது தடுக்கப்பட வேண்டும். அனைத்து மக்களும் இதனை விளங்கிக் கொண்டால் மாத்திரமே அதனைச் செய முடியும். கடந்த மூன்று தசாப்த காலப் பட்டறிவைக் கொண்டு அந்நிய வல்லரசு மேலாதிக்கம் எங்கிருந்து எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கப்பட வேண்டும். அந்நியத் தெவங்களை வணங்கி வரம் தருமாறு மன்றாடி நிற்கும் அடிமைத்தன அரசியல் போக்கு நிராகரிக்கப்படல் வேண்டும். சுயநிர்ணய உரிமைக்கான புதிய கட்ட வெகுஜனப் போராட்ட நிகழ்ச்சி நிரலில் அந்நிய மேலாதிக்க எதிர்ப்பு என்பது தெளிவாக வலியுறுத்தப்படவேண்டும். அதுவே புதிய அணுகுமுறையுமாகும்.
பேட்டி:பி.ரவிவர்மன்