தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த 9 மாவட்டங்களும் பெருவாரியானவை வட மாவட்டங்கள். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மண்டலங்களும் உண்டு. இந்நிலையில்தான் பாமக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது பின்னர் பேசிய டாக்டர் ராமதாஸ்,
“சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணி தர்மத்தை கடை பிடிக்கவில்லை. அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தனியாக போட்டியிட்டார்கள்.இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் அப்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் பாட்டாளி மக்கள் ,கட்சி பல முறையிட்டும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. அதே போன்று விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவும் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.எனவே அதிமுகவோடு கூட்டணி வைப்பதால் நமக்கு என்ன பயன்? பாமகவால் கூட்டணிக் கட்சிகள் பலமடைந்தன. ஆனால், கூட்டணியால் பாமகவுக்கு எந்த பலன்களும் இல்லை. ஆளுமையற்ற தலைவர்களால் பாமக தோல்வியடைந்தது.கூடுதல் தொகுதிகளில் வென்றிருக்க முடியும்” – என்று பேசினார். இது அதிமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது.
பாட்டாளி மக்கள் கட்சியை தங்கள் கூட்டணியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் வன்னியர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான சாதிகள் பாதிப்பிற்குள்ளான போதும் வாக்கு வங்கிக்காக இதை அதிமுக செய்தது. பாஜகவை விட மூன்று தொகுதிகள் அதிகம் 23 தொகுதிகளைக் கொடுத்தது. ஆனாலும் பாமக இப்போது ஆளுமையற்ற தலைவர் என எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்து விட்டது. அதே போன்று தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து விட்டது.