“இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா?” என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி. கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைய வில்லை. காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டு வந்த போதும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றியவர்கள் இவர்கள். திமுகவின் அடிப்படைக் கொள்கை என்னும் அளவில் அது நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரானது.
ஆனால், மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் தயவில் தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள நீட் என்னும் நீதியற்ற தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டவர் எடப்பாடி பழனிசாமி என்பது அனைவருக்குமே தெரியும்.
இப்போது அவர் கேட்கும் “இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா?” என்ற கேள்விக்குள் உள்ள டோன் அதிகாரத்திமிர் மிக்கது. மோடியும் நானும் சேர்ந்து நீட் தேர்வை கொண்டு வந்தோம். தமிழகத்தில் கஜானாவையே சூறையாடி விட்டு மோடியின் பாதுகாப்பில் இருக்கிறோம். இன்னும் எங்க பாஸ் மோடிதான் பிரதமராக இருக்கிறார். உன்னால் நீட் தேர்வை ரத்து செய்து விட முடியுமா என்பதுதான் அந்த திமிர் பிடித்த அழுக்கான வார்த்தைகளின் அர்த்தம். நீட் தேர்வால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.கிராமபுற ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பற்றி கவலைப்படாமல் நான் கொண்டு வந்த நீட்டை நீ ஒழித்து விடுவாயா என்பது போல பேசுகிறார். மேலும், அவரது குரல் பாஜக நீட்டுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் பாஜக தரப்பை வலுப்படுத்துவதற்காக இந்தகுரலை மீண்டும் மீண்டும் ஒலிக்கிறார். சென்னை உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ தலையிட்டு நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு முன்னெடுக்கும் முயற்சிகளை முடக்கி விட தூபம் இடுகிறார் எடப்பாடி பழனிசாமி.