அணுகுண்டு சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்து: புஷ் ரகசிய கடிதம்!

04.09.2008.

வாஷிங்டன்: இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் உடனடியாக இந்தியா- அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை 8 மாதங்களுக்கு முன்பு புஷ் நிர்வாகம், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.

இந்த நிபந்தனைகள் அனைத்தும் மன்மோகன் சிங் அரசுக்கு தெரியும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஹைட் சட்ட விதிகளின்படியே 123 ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் புஷ் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஹைட் சட்டம் 123 ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தாது என்று பிரதமர் அலுவலகம் ஜூலை 2, 2008 அன்று கூறியிருந்தது. ஆனால், ஹைட் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட் சட்டத்தை ஒப்பந்தம் மீற முடியாது என்று புஷ் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்ற அயல்துறை குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளது.

அது என்ன ஹைட் ஆக்ட்?- படிக்க

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்து 45 கேள்விகளை எழுப்பி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடம், நாடாளுமன்ற வெளியுறவு விவகார கமிட்டியின் தலைவர் டாம் லான்டோஸ் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கு ஜனவரி 16ம் தேதி, 26 பக்கங்களைக் கொண்ட பதில் கடிதத்தை புஷ் நிர்வாகம், லான்டோஸுக்குப் பின்னர் தலைவர் பதவியை வகித்து வரும் ஹோவர்ட் பெர்மானுக்கு அனுப்பியுள்ளது. இந்தக் கடிதம் அனுப்பப்பட்டு 8 மாதங்களாகிறது.

இக்கடிதத்தை தற்போது பெர்மான் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இது மன்மோகன் சிங் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை அரசு கூறி வந்த கருத்துக்களுக்கு முற்றிலும் முரணாக இக்கடிதம் இருப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

‘ஹைட் அடிப்படையில்தான் ஒப்பந்தம்’:

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு..

– ஹைட் சட்டத்தின் அடிப்படையிலான 123 ஒப்பந்தத்தின் கீழ் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் வருகிறது.

– இந்தியாவுக்கு அமெரிக்கா தடையற்ற எரிபொருள் சப்ளை செய்யும். இதனால் இந்தியாவின் அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக கருதி விடக் கூடாது.

– இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்த முடியாது. அப்படி நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மேலும், இந்தியாவுடனான அனைத்து அணு ஒத்துழைப்பும் ரத்து செய்யப்பட்டு விடும். இந்தியாவுக்கான அணு எரிபொருள் சப்ளையும் நிறுத்தப்பட்டு விடும்.

– அதேசமயம், மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அணு எரிபொருள் கிடைப்பதற்கு அமெரிக்கா உதவி செய்யும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– அமெரிக்காவின் இந்த நிபந்தனைகள் மற்றும் எச்சரிக்கைகள் அனைத்தும் மன்மோகன் சிங் அரசுக்குத் தெரியும் எனவும் பெர்மன் கூறியுள்ளார்.

இக்கடிதம் தொடர்பான தகவல்களை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடிதத்தை பகிரங்கமாக வெளியிட வேண்டாம் என புஷ் நிர்வாகத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டிருந்ததாம். ஆனால் என்.எஸ்.ஜியில் இந்தியாவுக்கு சலுகை அளிப்பது தொடர்பான முக்கிய கூட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில் பெர்மன் இக்கடிதத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் நம்பிக்ைக வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில், நாம் அணு ஆயுத சோதனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. நமக்குத் தேவையானால் நிச்சயம் நாம் அணு ஆயுத சோதனையை நடத்த முடியும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.