வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 3,000 கர்ப்பிணித் தாய்மாரில் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிறுவனம் அறிவித்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார், கைக்குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான மருத்துவத் தேவைகளுக்கு உதவிசெய்ய அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்ப்பிணித் தாய்மாரில் 15 வீதமானவர்களுக்குப் பிரசவத்தின்போது இரத்தம் தேவைப்படலாமெனவும், சிலர் அதிதீவிர சிகிச்சைக்கு மாற்றப்படவேண்டிய தேவை ஏற்படலாம். தேவையான மருத்துவ வசதிகளைச் செய்துகொடுக்காவிட்டால் பிரசவத்தின்போது தாய்மாருக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாமென ஐ.நா. சனத்தொகை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 190,000 பேர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் பால்ரீதியாக ஏற்படும் தொற்றுநோய்கள், எச்.ஐ.வி. தொற்றுநோய்கள் மற்றும் உளவளச் சிகிச்சை போன்றவற்றைத் தடுப்பதற்கான நடமாடும் மருத்து சேவையை ஐ.நா.சனந்தொகை நிறுவனம் நடத்தி வருகிறது.
இடம்பெயர்ந்திருக்கும் பெண்கள், சிறுமிகள் மற்றும் கர்ப்பிணத் தாய்மார்களுக்கான மருத்துவ உதவிப் பொருள்களைத் தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், கர்ப்பிணித் தாய்மாருக்கு அவசர பாதுகாப்புப் பிரிவுகளை வழங்கி உதவவும் அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகளில் காணப்படும் நெருக்கடியான சூழ்நிலை தாய்மாரையும், புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் பெரிதும் பாதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு சனநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும், தாய்மாரையும் பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
“பெண்களின் சுகாதாரம் குறித்து கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சுத்தமான இடங்கள் இன்மையால் கர்ப்பிணித் தாய்மாரின் பிரசவங்களிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன” என்று ஐ.நா. சனத்தொகை நிறுவனத்தின் பிரதிநிதி லெனி.கே.கிறிஸ்டியான்சென் கூறினார்.