சிவகங்கை மாவட்டம் திர்ப்புவனம் அருகே உள்ள கீழடி, மணலூர், அகரம், கொந்தவை ஆகிய கிராமங்களையொட்டு ஆறு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இப்போது 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி நடந்து வருகிறது. இதற்கு முந்தைய ஆய்வுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
இப்போது அகரம் பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் 8 அடி ஆழத்தில் உள்ள ஒரே குழியில் 2 அடுக்கு மூன்று அடுக்குகளைக் கொண்ட மூன்று உறை கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் தொடரும் பட்சத்தில் இந்த உறைகிணறுகளின் முழு நீளம் ஆழம் தெரியவரும்.
மேலும் தொடர்ந்து கீழடி,கொந்தகை மணலூர் அகரம் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உறைகிணறுகள் என்றால் என்ன?
சுடுமண்ணாலான வளையங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கிணறு “உறைகிணறு’ எனப்படும். பொதுவாகக் கடற்கரை அருகிலும், மணற்பாங்கான இடத்தில் பக்கங்களிலிருந்து மண் சரிந்துவிடாமல் இருப்பதற்காக உறை கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
காவிரிப்பூம்பட்டினத்தில் வானகிரி, நெய்தவாசல், பெருந்தோட்டம் முதலிய பகுதிகளில் உறைகிணறுகள் காணப்படுகின்றன.
கடற்கரை அருகில் உறை கிணறுகள் இருந்ததாகப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. .
தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் பல இடங்களில் உறை கிணறுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கொற்கை, அரிக்கமேடு, மாமல்லபுரம், வசவசமுத்திரம் (மாமல்லபுரம் அருகில்), மாளிகைமேடு, செங்கமேடு, மாங்குடி(நெல்லை), காஞ்சிபுரம், படைவீடு, பெரியபட்டினம் முதலிய இடங்களிலும் அண்மையில் கீழடி (சிவகங்கை) பட்டரைப் பெரும்புதூர் (திருவள்ளூர்) போன்ற இடங்களிலும் உறை கிணறுகள் வெளிப்படுத்தப்பட்டன.
இவை இரண்டு வகையாக இருக்கும். ஒரே உயரம் அளவு உடையதாக வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வளையங்களுக்கு இடையில் களிமண்பூச்சு இருக்கும். சில இடங்களில் வளையத்தின் நடுவே சிறு துவாரம் இருக்கும். இதன் வழியே பக்கவாட்டு நிலத்தில் உள்ள நீர் கிணற்றுக்குச் சென்றுவிடும்.