திங்கள் இரவு 10 வயோதிபர்களின் சடலங்கள் வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வயோதிபர்களின் மரணங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன.
கடந்த திங்கட்கிழமை இரவு மட்டும் நலன்புரி நிலையங்களில் இறந்த பத்து வயோதிபர்களது சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டன.
கடந்த முதலாம் திகதி முதல் திங்கட்கிழமை வரையான நான்கு நாட்களில் 30 வயோதிபர் வரை நலன்புரி நிலையங்களில் மரணமடைந்துள்ளனர். இந்த வயோதிபர்களது சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டு சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களில் வன்னியிலிருந்து வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டவர்களிலும் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்த நிலையில் இவர்களது சடலங்கள் வவுனியா பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நலன்புரி நிலையங்களில் நோய், சரியான பராமரிப்பு இன்மை, உளரீதியிலான பாதிப்பு போன்ற காரணங்களினால் வயோதிபர்களுடைய மரணங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணித்தவர்கள் அனைவரும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெயர்ந்த வயோதிபர்களுக்கான நலன்புரி நிலையம் சமளன்குளம் பாடசாலையில் இயங்குகின்றது. இங்கு 65 வயோதிபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் 29 பெண்கள் உள்ளனர். கோவில்குளம் சிவன் ஆலய நிர்வாகம் இவர்களை பராமரிக்கின்றது.