உலகம் முழுவதும் அவலத்துள் வாழும் தமிழ் அகதிகளின் அவலநிலை தொடர்பான மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அதன் ஆரம்பப் புள்ளியாக தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்பு குழு பிரித்தானியாவில் நோர்பிட்டன் பகுதியில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. பறை ஒலியுடன் ஆரம்பித்து 3 மணி நேரம் நடைபெற்ற இக் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தமிழ் அகதிகள் மீதான உலகளாவிய ஒடுக்குமுறை இன்றைய சமூகத்தின் பிரதான பிரச்சனை என்பதனை அடிப்படையாகக்கொண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழ் நாட்டில் சிறப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அகதிகள், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் நிராகரிக்கப்படும் நிலையிலுள்ள அகதிகள், அவுஸ்திரேலிய படகு அகதிகள், ஆபிரிக்க நாடுகள் முதல் மலேசியா போன்ற நாடுகளில் வாழும் அகதிகள் வரை பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன.
இறுதியாக அகதிகள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதனூடான மக்கள் எழுச்சிக்குத் தயார்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்வைப்பது குறித்தும் பேசப்பட்டன.
உலகம் முழுவதும் அகதிகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தல், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை எதிர்கொள்ளல், போன்றவை பேசப்பட்டன.
உடனடி நடவடிக்கையாக அகதிகளுக்கான அமைப்பை உருவாக்கும் நோக்கில் பல்வேறு பிரதேசங்களில் பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய கால இடைவெளியில் கிழக்கு லண்டன் பிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை முதலில் ஏற்பாடு செய்வது எனத் திர்மானிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் குறித்த முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு விரைவில் வெளியிடும் எனத் தெரிவிக்கிறது.