இன்றைய சமுதாயத்தின் இழி நிலமையினை, முதலாளித்துவ நிறுவனங்களில் வேலை செய்து, பின்னர் முதலாளித்துவ நிறுவனங்களினால், தனது மற்றும் மக்களின் இரத்தம் உறிஞ்சப்படுகின்றது என்கிற அப்பட்டமான உண்மை நிலை கண்டு வருந்தி, அந்நிறுவனங்களுக்காக வேலை செய்வதை நிறுத்தி, சுய தொழில் செய்து பிழைத்து வரும் ஓவியரான ஸ்டீவ் கட்ஸ், தனது கைவண்ணத்தில் ஒளிப்படமாக வரைந்து வெளியிட்டு வருகின்றார். அவர் வரைந்த ஓவியங்களில் சில……..
அவர் வரைந்த ஒளிப்படங்கள், “முதலாளித்துவ நிறுவனங்களின் பேராசை, அந்நிறுவன முதலாளிகளின் பேராசை காரணமாக அழிக்கப்படும்,அசுத்தப்படுத்தப்படும் பூமி, உலர் உணவு என்கிற பெயரில் மனிதர்கள் உட்கொள்ளும் நச்சு மிக்க, போசாக்கற்ற, வீண் உணவு பண்டங்கள், மிருகங்களை வதைத்து கொன்று தயாரிக்கப்படும் புலால் உணவுப்பொருட்கள், முதலாளித்துவ ( ஆயுத வியாபாரிகளால் ) நிறுவனங்களால் பக்கச்சார்பாக இயக்கப்படும் வானொலிகள், தொலைக்காட்சிகள், அவை தரும் போலி செய்திகள், அவர்களால் இயக்கப்படும் போலி அரசியல்வாதிகள், அவர்கள் கூறும் போலி வார்த்தைகளை மற்றும் அவ்வகையான போலி ஊடகங்கள் ஒலி, ஒளிபரப்புவனவற்றை பகுத்து ஆராயாமல் சக மனிதர்களை வெறுத்து ஒதுக்கும் சுய சிந்தனையற்ற மனிதர்கள், சமுதாயத்தை சீரழிக்கும் நிகழ்ச்சிகள், அவற்றிற்கு அடிமையான இன்றைய இளைய சமுதாயம், முதலாளித்துவத்தால் இயக்கப்படும் சூதட்டங்களுக்கு அடிமையான மக்கள், முதலாளித்துவ நிறுவனங்களுக்காகவும் அவை உற்பத்தி செய்யும் போகப்பொருட்களை வாங்குவதற்காகவும், அடிமைகள் போன்று வேலை வேலை என்று வேலைப்பழு காரணமாக தமது பெறுமதி மிக்க வாழ் நாட்களை வீணடிக்கும் மனிதர்கள், ” போன்ற கருத்துக்களை விளக்கும் வகையில் கட்டியம் கூறி நிற்கின்றன. அவருடைய இணையதளத்திற்கு செல்ல இந்த இணைப்பை அழுத்துங்கள்… http://www.stevecutts.com/
மனிதர்களாகிய நாம், இக்கேடு கெட்ட முதலாளித்துவம் கொண்டு இயக்கும் போலி இயந்திரமயமான உலகில் இருந்தும், அவர்கள் தரும் போலி இன்பங்களை தரும் போக பொருட்களில் மேல் உள்ள இச்சைகளில் இருந்தும் எம்மை விடுவித்து, இயற்கை அன்னையுடன் ஒன்றிய வாழ்வை வாழ்ந்து, நாம் பிறந்த இவ் வாழ்வின் உன்னத பயனை அடைவோம். இயற்கையுடன் ஒன்றிய வாழ்வை நாம் வாழும் போது, நாமே எமக்கு தேவையான மிகவும் சத்துள்ள இயற்கை உணவுப் பொருட்களையும், இயற்கை குடிபானங்களையும், விவசாயம் ( இயந்திர வாழ்வுடன் ஒப்பிடும் போது விவசாயிகளுக்கு போதிய அளவு ஓய்வு நேரம் கிடக்கிறது. ) செய்து உற்பத்தி செய்யக்கூடியதாக இருப்பது மட்டும் அன்றி, எஞ்சி இருக்கும் மீதி நேரங்களில், சமுதாயத்துடன் இணைந்து செயற்படவும், சமூக சேவைகள் செய்ய முடியுமாக இருப்பது மட்டும் அன்றி, இயற்கை வாழ்வியலை பற்றி ஆராய்ந்து அறியக்கூடியதாகவும் இருக்கிறது. முதலாளித்துவ நிறுவனங்களால் விற்கப்படும் நச்சு மிக்க உலர் உணவுப்பொருட்களையும், குளிர் பானங்களையும் வாங்கி எமது உடல் நலத்தை கெடுத்து முதலாளித்துவத்தை ஊக்குவிக்காது, நாம் எமக்கு தேவையான உணவுப்பொருட்களையும், இயற்கை குடிபானங்களையும், விவசாயிகள் கூடி விற்கும் சந்தைகளிற்கு சென்று நியாயமான விலை கொடுத்து வாங்கி, விவசாயத்தையும், விவசாயிகளையும் மேலும் ஊக்குவிப்பதோடு, எம்மை வேரோடு அழிக்கும் முதலாளித்துவத்தை வேரோடு சாய்ப்போம். விவசாயத்தை அழிக்கும் முதலாளித்துவ விவசாயமான GMOஇனை அழிக்க, விவசாயிகளுக்கு தோள் கொடுப்பது மட்டும் அன்றி, இயற்கை கிருமி நாசினிகளையும், இயற்கை பசளைகளையும் விவசாயிகள் பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்.
“உயிர்களிடத்திலும், இயற்கை அன்னையிடத்திலும் அன்பு செலுத்துவோம்.”
தமிழாக்கம் – செங்கோடன்