வித்தியாதரனை யாழ். மாநகரசபையின் முதல்வராக்கினால் யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் என அப்பத்திரிகையின் ஸ்தாபகரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலின் ஆசனப் பங்கீட்டுப் பிரச்சனை ஓரளவு தீர்த்தபின்னர், தற்போது, யாழ். மாநகர முதல்வர், தெரிவில் வித்தியாதரனுக்கு எதிராக அவரது மைத்துனரான சரவணபவன் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு வித்தியாதரன் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இதனால், அவர் முன்னாள் போராளிகள் என சிலரை இணைத்து ஜனநாயகப் போராளிகள் கட்சியை உருவாக்கி அதில் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்திருந்தார்.
இந்நிலையில், வித்தியாதரனை யாழ். மாநகர முதல்வராக நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும்சுமந்திரன் ஆகியோர் விருப்பம் தெரிவித்த நிலையிலேயே சரவணபவன் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதனால் வித்தியாதரனின் யாழ். மாநகர முதல்வராகும் கனவும் பொய்த்துப்போய்விட்டது.