எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் சாவகச்சேரி நகரசபைக்கு மாத்திரமே தேர்தல் நடைபெறவுள்ளது.
எல்லைநிர்ணயப் பிரச்சனை மற்றும் சட்ட ரீதியான தடைகளால் ஏனைய பிரதேசங்களுக்கு தேர்தல் நடைபெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களில் 243 உள்ளூராட்சி மன்றங்களுக்கெதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏனைய 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக வேட்பு மனுக்கோரும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நான்கு மட்ட அரசாட்சி முறைகள் காணப்படுகின்றன. ஜனாதிபதி, பாராளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள், இதில் உள்ளூராட்சி சபையே அடிமட்ட மக்களின் பிரச்சனைகளுடன் தொடர்புடையது. எனவே மக்கள் அனைவரும் உள்ளூராட்சி சபைக்கு சிறந்த மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யவேண்டிய நிலையிலுள்ளனர்.
இந்நிலையில் வடமாகாணத்தில் சாவகச்சேரி நகர சபையைத் தவிர கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்குத் தேர்தல் நடைபெறமாட்டாது. அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியைத் தவிர மற்றய இடங்களுக்கும் தேர்தல் நடைபெறாது.
இவ்வாறானதொரு நிலையில், நேற்று ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நடத்தப்பட்ட கட்சிக் கூட்டத்தில் புதிதாக எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களைத் தவிர்த்து மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணய உள்ளூராட்சி சபையை ஏற்றுக்கொள்வதால் தற்போது எழுந்துள்ள சட்டச் சிக்கலை நீக்கிக்கொள்ளலாம் என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், உள்ளூராட்சித் தேர்தலுக்கான எல்லை மீள் நிர்ணயம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பகுதி இன விகிதாசாரத்தின்படி பெரும்பான்மை இனத்திற்கே சாதகமாக அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.