நேற்று யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னால் அமைந்திருக்கும் குமாரசாமி வீதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை அவ்வீதியால் வருகைதந்த முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் தள்ளி விழுத்தியதுடன், கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞர் 28 வயதுடையவர் எனவும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் சிவிலுடையிலிருந்ததாகவும், இச்சம்பவம் முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்றதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அண்மையில் அரியாலைப் பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த மீனவ இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவமும், முச்சக்கரவண்டியில் வந்த சிவிலுடை தரித்த நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதாகவும், இச்சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மண்டைதீவு இராணுவ முகாமில் தரித்திருப்பதாகவும், இராணுவ முகாமில் சோதனையிட வேண்டாமென தமக்கு மேலிடத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
சில நாட்களின் பின்னர், இரண்டு காவல்துறை அதிகாரிகளே இத்துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டார்கள் எனவும் அவர்களைக் கைது செய்வதாகவும் அறிவிக்கப்பட்டு பின்னர் அவர்கள் இச்சம்பவத்துடன் தொடர்புபடவில்லையெனவும், குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அறிவித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.
இவ்வாறு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட ஆயுதக்குழுவான ஆவாக் குழு எனத் தெரிவித்து ஒருபுறம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுக்கொண்டிருக்க, மறுபுறம் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என நாளாந்தம் காவல்துறையினரால் கைதுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாவர்.
இவ்வாறு யாழ். மண்ணில் ஒரு தலைமுறை இளைஞர்கள் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருவதோடு, அவர்களைப் பல குற்றச் செயல்களில் ஈடுபடுத்தி, அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா பேரினவாத அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமை கண்கூடு.