பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்குள் வருகைதரவேண்டுமென்பதற்காக பாடசாலைகளில் கைரேகை அடையாள முறை புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தனியார் வகுப்புக்களைக் நடத்தும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், தற்போதைய காலத்தில் பாடசாலைக் கல்வியைவிட தனியார் கல்வியிலேயே மாணவர்கள் பெரிதும் தங்கியுள்ளனர்.
பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களே, தனியார் வகுப்புக்களையும் நடத்தி வருகின்ற காரணத்தினால் பாடசாலைகளில் அவர்கள் சரியாகக் கற்பிப்பதில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான ஆசிரியர்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரத்தியேக வகுப்புக்களை எடுப்பதுடன், பாடசாலை இடைவேளைகளிலும் வகுப்புக்களை நடத்தி பணம் சம்பாதிக்கின்றனர்.
இந்நிலையில், கைரேகைப் பதிவினால் இவர்களின் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள் கைரேகைப் பதிவுக்கெதிராக அண்மையில் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர்.
அதில் ‘மீள முடியாத பாதையில் வடக்கு மாகாணம், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எங்கள் கைகளில், ஆசிரியர்களே ஒன்றுபடுங்கள், வடக்கு மாகாணம் கல்வியில் 9 வது இடத்தில் இருப்பதற்கு யார் காரணம் கையடையாள இயந்திரத்தினால் ஆசிரியர்களுக்கு தேவையற்ற லீவு, மன உளைச்சல் ஏற்படுகின்றதெனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சு கவனத்தில் எடுக்கவேண்டுமென்பதே மக்களின் விருப்பமாகும்.