எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 நாளன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்குகளைப் போடவேண்டுமெனவும், அவ்வாறு போடாதுவிட்டால் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படமாட்டாது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று பருத்தித் துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியிருந்தார்.
மேலும் அவர், புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், சமஷ்டித் தீர்வே பரிந்துரைக்கப்பட்டுள்ளதெனவும், அதனையே ஏக்கிய ராஜ்ய எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் ஏக்கிய ராஜ்ய என்றால் ஒருமித்த நாடு எனவும் இதுபற்றி மக்கள் குழம்பிக்கொள்ளத் தேவையில்லையெனவும் உரையாற்றியிருந்தார்.
சுமந்திரன் மேடைகளில் மக்களுக்கு இவ்வாறு பிரச்சாரம் செய்துவரும் நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஏக்கிய ராஜ்ய என்றால் ஒற்றையாட்சியுடைய நாடு எனவும், அதில் எந்த மாற்றமும் கிடையாது எனவும், இந்நாட்டில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.
அதைவிட மேலாக, இடைக்கால அறிக்கையை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர்களுள் ஒருவரான ஜயம்பதி விக்கிரமரட்ணவும், இடைக்கால அறிக்கையில் இலங்கை ஒற்றையாட்சியுடைய நாடு என்பது அழுத்திக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரின் இடைக்கால அறிக்கையில், சமஷ்டி ஆட்சியே வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் சமஷ்டித் தீர்வு கிடையாது போகும் என மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.