உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் நியமனத்தில் சர்ச்சைகளும், அடிதடிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்குள் சங்கானை பிரதேசம் வருவதால் அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக சரவணபவன் மாவை சேனாதிராஜாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியானது முதல் இரண்டு வருடங்களும் புளொட்டுக்கும், அடுத்த இரண்டு வருடங்களும் தமிழரசுக் கட்சிக்குமென தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் புளொட் அமைப்பிற்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.
அதன்காரணமாக, வட்டுக்கோட்டைத் தொகுதியைத் தனக்குத் தராவிட்டால், சரவணபவனின் நாளிதழான உதயன் நாளிதழ் தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் செய்திகளை வெளியிடும் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, மாவைசேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனுடன் பேச்சு நடத்தியுள்ளார். இருப்பினும் இதற்கு சித்தார்த்தன் இணங்கியதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், யாழ். மாநகர முதல்வராக சி.வி.கே. சிவஞானத்தை போட்டியிடுமாறு மாவை சேனாதிராஜா அழுத்தம் கொடுத்ததற்கு சி.வி.கே.சிவஞானம் மறுப்புத் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆர்னோல்டை மாநகர முதல்வராக நியமிக்க சுமந்திரன் வற்புறுத்தி வருகின்றார்.
இந்நிலையில், ஜெயசேகரம் தன்னை யாழ். மாநகர முதல்வராக நியமிக்குமாறு தொடர்ச்சியாக வற்புறுத்தி வரும் நிலையில், ஆர்னோல்ட்டை நியமிக்கவே சம்பந்தன், சுமந்திரன் தரப்பு விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.